தேவகோட்டை, தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தமிழ் மற்றும் வரலாறு பிரிவு ஆசிரியர்களில் முனைவர் பட்டம் பெற்ற ம. ஸ்டீபன் மிக்கேல் ராஜ், அ. மைக்கேல் குரூஸ், யே. சாந்தக்குமார், அ. பௌலியன்ஸ், சூ. அன்பரசன் எனும் ஐந்து ஆசிரியர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் ஐந்தருவி எனும் பெயரில் நூலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
குற்றாலத்தின் சிறப்பாகச் சொல்லப்படும் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்திடும் சுற்றுலாப் பயணிகளைப் போல், இந்நூலில் ஐந்தருவிகள் (ஐந்து ஆசிரியர்கள்) வரலாறு, வாழ்வியல், விழிப்புணர்வு எனும் மூன்று பொருண்மைகளில் பதினைந்து அருவிகளாகப் பிரிந்து நம்மை மகிழ்ச்சியூட்டுகின்றன.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் பதினைந்து கட்டுரைகளும் சிறப்பான கட்டுரைகள் என்பதற்கு அடையாளமாக, கீழ்க்காணும் ஐந்து குறிப்புகளை மட்டும் இங்கு உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.
ம. ஸ்டீபன் மிக்கேல்ராஜ் எழுதியிருக்கும் ‘வீறுகவியரசர் முடியரசனார் படைப்புகளில் வரலாற்று ஆளுமை’ எனும் கட்டுரையில், “முடியரசனாரின் மணி விழாவிற்குத் தலைமையேற்ற அடிகளார், தனது உரையில் முடியரசனாரை நாத்திகர் என்று குறிப்பாகக் கூறினார். முடியரசனார் தம் ஏற்புரையில் ‘நீங்கள் முருகனை, சிவனைக் கடவுள் என்கிறீர்கள். நான் தமிழைக் கடவுள் என்கிறேன். நான் எப்படி நாத்திகனாக முடியும்?’ என்று பேசினார்” என்று குறிப்பிட்டிருப்பதன் வாயிலாக, வீறுகவியரசர் முடியரசனாரின் சிறந்த பேச்சுத்திறனை அறிய முடிகிறது.
அ. மைக்கேல் குரூஸ் எழுதியிருக்கும் ‘முடியரசனார் பார்வையில் பெரியாரும் அண்ணாவும்’ எனும் கட்டுரையில், “தந்தை பெரியார், திருத்தலங்கள், திருக்கோயில் வேண்டாம் என்று முழங்கியவர். அதனை ஏற்றுக் கொண்ட கவிஞர் முடியரசனார், தன்மான இயக்கத்தார்க்குத் திருத்தலங்கள் மூன்று என்பதை, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் பிறந்த ஈரோடு, காஞ்சிபுரம், ஆரூர் ஆகிய ஊர்களை மூன்று திருத்தலங்களாகத் தனது கவிதையின் வழியாக அறிவிக்கின்றார்” எனும் தகவலைப் படிக்கும் போது, முடியரசனார் சமூகநீதிப் பெரியோர்கள் மூவர் மீது கொண்டிருந்த மேலான அன்பும், பாசமும் வெளிப்படுகிறது.
யே. சாந்தக்குமார் எழுதியிருக்கும் ‘தமிழகத்தின் ஆசிவகம்: மீட்டுருவாக்கம்’ எனும் கட்டுரையின் முடிவில், “ஆசிவகம் வடகிழக்கு இந்தியாவில் தோன்றியது என்பதை விடத் தமிழகத்தில் செழித்து வளர்ந்த சமயமாக இருந்திருக்கிறது. கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது என்பதை விட ரிஷபர் என்ற ஆதிநாதரின் வழிமுறைகளைப் பின்பற்றிக் கைக்கொண்ட சமயங்களாகச் சமணமும் ஆசிவகமும் இருக்கின்றன. உருவ ஒப்புமையால் ஆதிநாதரே பிற்காலத்தில் சிவனாக அறியப்படுகிறார்” என்ற செய்தியைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
அ. பௌலியன்ஸ் எழுதியிருக்கும் ‘சங்கம் மருவிய கால இலக்கியங்களில் வாழ்வியல் அறம்’ எனும் கட்டுரையில், “போரிலே யானைக்கு அஞ்சிப் பின் வாங்கும் வீரனும், அயலான் மனைவியை விரும்பி அவள் வீட்டு வாயிலில் நிற்பவனும், நச்சுப் பாம்பை ஆட்டுகின்றவனும் விரைந்து கெட்டொழிபவராவார் என்று பிறனில் விரும்பும் தீமையைக் கடிந்துரைக்கிறார் நல்லாதனார்” எனும் கருத்தைத் தெரிவித்து, பிறன்மனை நயவாமை பற்றிச் சொல்கிறார்.
சூ. அன்பரசன் எழுதியிருக்கும் ‘தமிழ்வழிக் கல்வி எதிர்நோக்கும் பிரச்சனைகளும் தீர்வுகளும்’ எனும் கட்டுரையில், “ஆங்கிலம் இல்லாமல் அகிலத்தில் ஏதும் செய்யவியலாது. ஆங்கிலவழிக் கல்வியே அறிவின் திறவுகோல் என்று மக்கள் தவறான புரிதலைக் கொண்டு வாழும் அவலநிலை இன்று நிலவுகிறது. நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவதைப் பெருமையானது என்னும் கலாச்சாரம் இன்றைய இளைய தலைமுறையினரிடையே வேரூன்றியுள்ளது. ஆங்கிலவழிக் கல்வியில் கற்பதன் மூலம் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுவது எளிது என்றும், சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற முடியும் என்றும் பலர் எண்ணுகின்றனர்” என்று தமிழக மக்களின் தவறான புரிதலைக் குறிப்பிட்டு, இந்நிலை மாறச் செய்ய வேண்டியவைகளையும் பட்டியலிட்டிருப்பது சிறப்பு.
80 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் படித்துப் புகழ் பெற்ற ஆளுமைகளாகப் பல மாணவர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நல்வழி காட்டிய இப்பள்ளியின் ஆசிரியப் பெருந்தகைகள் பெருமைக்குரியவர்களாக இருந்து வருகின்றனர். அவர்களோடு இப்பள்ளிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்நூலின் ஆசிரியர்களும் இணைந்திருக்கின்றனர்.
இப்பள்ளியாசிரியர்கள் ஐவரும், இப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களிலிருந்து நாளைய உலகிற்கு மேலும் பல ஆளுமைகளை உருவாக்கித் தரக்கூடும் என்கிற நம்பிக்கை வருகிறது.
இந்நூல்களின் ஆசிரியர்களை இப்பள்ளியின் பெருமைமிகு ஆசிரியர்கள் என்று பாராட்டலாம்...! வாழ்த்தலாம்...!
(
குறிப்பு: எஸ். எஸ். தென்னரசு, ‘ஐந்தருவி’ எனும் பெயரில், முன்பு ஒரு நாவல் எழுதியிருந்ததாக நினைவு இருக்கிறது)