அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சாதாரண நிகழ்வைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல், தற்கொலை எனும் தவறான முடிவுக்குச் செல்லும் கோழைகளாகப் பலர் இருக்கின்றனர். அவர்களைப் போன்ற எண்ணமுடையவர்களுக்கெல்லாம், ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்பதை உணரச் செய்யும் கட்டுரையில் தொடங்கி, வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம், அந்த முடிவை நாமாகத் தேடிச் செல்லக் கூடாது என்பதை உணர்த்தும் வழியில், வாழ்க்கையின் முடிவு வரும் வரை ‘வாழ்ந்து பார்க்கலாம் வா!’ என்று வழிகாட்டும் கட்டுரையில் முடிவாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
வாழ்க்கையின் தொடக்கத்திற்கும், முடிவிற்கும் இடைப்பட்டக் காலத்தில், வாழ்க்கை ஒரு அழகான பயணம், அப்பயணத்தில், நன்மைகள் - தீமைகள், இன்பங்கள் - துன்பங்கள், ஏற்றங்கள் - இறக்கங்கள், வெற்றிகள் - தோல்விகள், மகிழ்ச்சிகள் - கவலைகள் என்று அனைத்தும் வந்து செல்கின்றன. அவைகளையெல்லாம் ஏற்று, வாழ்க்கையைச் சமமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையை முழுமையாக ரசித்து, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். வாழ்க்கையில் வரும் சுமைகளை எல்லாம் எளிமையாகச் சுமந்து கொண்டு, அந்த வாழ்க்கையைச் சுகமாகவும், சுவையாகவும் மாற்றிக் கொள்ளத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல கட்டுரைகளை நூலின் தொடக்கத்திற்கும், முடிவிற்கும் இடையில் சுவையான கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
வாழும் காலத்தில், அவ்வப்போது வரும் சண்டைகளைத் தவிர்க்கவும், தேவையானதைக் கற்றுக் கொள்ளவும், வாழ்க்கைக்கான குறிக்கோள்களுடன் பயணிக்கவும், மனமகிழ்ச்சிக்குச் சுற்றுலா செல்லவும், விடுமுறைகளைக் கொண்டாடவும், இறைநம்பிக்கை கொள்ளவும், நேரத்தைக் கண்காணிக்கவும், பயத்தைத் துணிவாக எதிர்கொள்ளவும், பணியிடத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், உடல் நலத்தைப் பேணவும், மகிழ்ச்சியுடன் இருக்கவும், எளிமையாக வாழவும், எதிர்பார்ப்புகளைக் குறைக்கவும், தொல்லைகளைத் தீர்க்கவும், இசையை ரசிக்கவும், கவலைகளைத் துரத்தியடிக்கவும், கடந்த காலத்தை மறக்காமலும், மாற்றங்களை உருவாக்கவும், ஓய்வெடுக்கத் தயங்காமலும் இருக்க வேண்டுமென்று பல வழிகாட்டுதல் கட்டுரைகளை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
கணினித் தொழில்நுட்பம் குறித்த நூல்களை எழுதி, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கணினியியல் பிரிவில் இருமுறை முதல் பரிசினைப் பெற்ற இவர், தனது கணினித் தொழில்நுட்ப நூல்களின் வழியாகக் கணினி ஆர்வலர்களுக்கு கணினியினை எளிமையாகப் பயன்படுத்துவது குறித்து வழிகாட்டியிருக்கிறார். அச்சகச் சங்கம் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் மூலம், அதன் உறுப்பினர்களுக்கு அச்சுத் தொழில் மற்றும் புகைப்படத் தொழில்களில் கணினியை எளிமையாகப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளை அளித்து, அவர்களின் தொழில் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியிருக்கிறார். தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளில், கணினி வரைகலை மென்பொருள் பகுதிக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி, அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் சுயதொழில் செய்திடவும், கணினிசார் பணிகளில் சேர்க்கை பெற்றிடவும் வழிகாட்டியிருக்கிறார்.
தான் கற்ற கணினித் தொழில்நுட்பத்தை, அனைவருக்கும் எளிமையாகக் கற்றுக் கொடுத்து, பலரது வாழ்க்கை உயர்வுக்கு நல்வழி காட்டிய நூலாசிரியர், தற்போது மனித வாழ்க்கையை எப்படி நன்முறையில் வாழ்வது? என்று வழிகாட்டுவதற்காக இந்த சிறப்பான நூலைத் தந்திருப்பது, உண்மையில் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.
வாழ்க்கையை முழுமையாக அறிந்து, நன்றாக வாழ வழிகாட்டும் 50 கட்டுரைகளின் வழியாக, “உங்கள் வாழ்க்கை! உங்கள் கைகளில்!!” எனும் சிறப்பான நூலைத் தந்திருக்கிறார் நூலாசிரியர் என்றால் அது மிகையில்லை.
இந்நூலை முழுமையாகப் படித்து முடித்த பின்பு, உங்களுக்கேத் தோன்றும், ”உங்கள் மகிழ்ச்சி! உங்கள் வாழ்க்கையில்” என்று...!