சிறப்பான வாழ்வுக்குத் தேவையானவை எவையெவை? என்று முன்பே அறிந்து செயல்பட்டால் மட்டுமே வாழ்வில் வெற்றியடைய முடியும். குறிப்பாக, மாணவப் பருவத்திலேயே வாழ்வுக்குத் தேவையான சிந்தனைகள் அவர்களிடம் தோற்றம் பெற்றிட வேண்டும். பள்ளியில் ஆசிரியராக இருப்பவர்கள் சொல்லும் தகவல்களேப் பெரும்பான்மையன மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து, அவர்களின் வாழ்வின் வளத்திற்கு அடித்தளமாக அமைகிறது. பெரும்பான்மையான ஆசிரியர்கள், தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு வெறும் ஏட்டுக்கல்வியைப் பயிற்றுவிக்கும் எந்திரங்களாகவேப் பணியாற்றி வருகிறார்கள். நூலாசிரியரைப் போன்று செயல்படும் சிலர், பள்ளியாசிரியர் எனும் நிலையிலிருந்து தங்களைச் சிறிது உயர்த்திக் கொண்டு, எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர் என்பது போன்ற சில சிறப்பான பணிகளையும் செய்து வருகின்றனர்.
நூலாசிரியர் பள்ளியாசிரியராகவும் பணியாற்றி வருவதால், மாணவர்களின் வளமான வாழ்வுக்கு எவ்வழி நல்வழி? என்று அறிந்து, அவ்வழிகளை மாணவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வழியில், இந்நூலை எழுதியிருக்கிறார். பிறப்பு, சொந்தம் சுற்றம், கல்வி, நேரம் தவறாமை மற்றும் நேர மேலாண்மை, ஒழுக்கம், பொதுச்சேவை, மொழிப்பற்று, நாட்டுப்பற்று, தளராத ஊக்கம், நல்லவராய் வாழ்தல் போன்ற மாணவர்களுக்குத் தேவையான தலைப்புகளில் நல்ல பல கருத்துகளை உள்ளடக்கிய சிறிய அளவிலான, சிறப்பான கட்டுரைகளை வழங்கியிருக்கிறார்.
இளைஞர்களின் பாதை எப்படியிருக்க வேண்டும்? என்று ஒரு கட்டுரையில் வழிகாட்டுகிறார். ஊர்வசி - சயந்தன் கதையைச் சொல்லி, அதன் வழியாக, மாணவப் பருவத்தில் ஏற்படும் காதல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கேளிக்கை போன்ற சின்னச்சின்ன ஆசைகளைப் புறந்தள்ளி, சிறப்பாகக் கல்வி கற்றல், திறன்களை வளர்த்தல் போன்றவைகளைச் செய்தால், அது வாழ்நாள் முழுவதும் பயன் தரும் என்று வழிகாட்டுகிறார். இளம் பருவத்தில் இருப்பவர்களுக்கு, உலகநாதப் பண்டிதர் எழுதிய உலக நீதியை அறிமுகம் செய்து, அந்தப் பாடல்களில் இடம் பெற்றிருக்கும் நீதியை மாணவர்களாக இருப்பவர்கள் அறிந்து, அதனைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், உலகநீதிப் பாடல்களைச் சொல்லி, அதற்கான பொருள் விளக்கத்தையும் தந்திருக்கிறார். கடைசியாக ஔவையார் இயற்றிய ‘நல்வழி’ பாடல்கள் அனைத்தையும் குறிப்பிட்டு, அதற்கான பொருள் விளக்கத்தையும் மிகவும் எளிமையான முறையில் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாகச் சிறப்பாகத் தந்திருக்கிறார்.
மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்கிற நூலாசிரியரின் நோக்கம், இந்த நூலின் வழியாக அவர் பணியாற்றும் பள்ளியைக் கடந்து, மாநிலம் முழுவதுமுள்ள அனைத்துப் பள்ளிகளையும் சென்றடைய வேண்டும். அதன் வழியாக, மாணவர்கள் அனைவரும் நல்வழியை அறிந்து பயணிக்க வேண்டும். வாழ்வில் பல நல்ல செயல்களைச் செய்து, தம் முன்னேற்றத்தோடு, நாட்டின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.