சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் நிர்மலாவுக்கும், அவரது கணவர் மனோஜ் என்பவருக்குமிடையிலான மணமுறிவு வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்று இந்தக் கதை தொடங்குகிறது. ஆமாம், யார் இந்த நிர்மலா?
தேனி மாவட்டம் ஆதிபட்டியிலிருந்து வாழ்வாதாரத்தைத் தேடி மனைவி ராசம்மாள் மற்றும் குடும்பத்துடன் சென்னைக்கு இடம் பெயர்ந்த மொக்கையன், அங்குள்ள காய்கறிச் சந்தையொன்றில் சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணியைத் தொடர்கிறார். ‘கெட்டும் பட்டணம் போ’ என்கிற வழக்கு மொழி, அவருக்குப் பொருந்தா மொழியாகிப் போனது. சுமை தூக்குவதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு, வீட்டு வாடகை, குடும்பத்தினரின் உணவுத் தேவையைச் சமாளிக்க முடிந்ததேத் தவிர, வாழ்க்கையில் முன்னேற்றத்தைப் பெறமுடியவில்லை.
தங்களைக் காப்பாற்றப் போராடும் தந்தையின் முயற்சிக்குத் தங்களால் இயன்ற அளவு உதவிட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த நான்கு பெண் குழந்தைகளும், தங்கள் பள்ளிக்கூடப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, வேலைக்குச் செல்வதென்றும், தம்பி பார்த்திபனை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்றும் முடிவு செய்கின்றனர். தந்தை மொக்கையனுக்கும் வேறு வழி தெரியாததால், மகள்கள் வேலைக்குச் செல்வதற்கு ஒப்புக் கொள்கிறார். மகள்கள் வேலைக்குச் சென்ற பின்பு, அவருடைய குடும்பம் வறுமையின் பிடியிலிருந்து வெளியில் வருகிறது. நான்கு பெண்களுக்கும் திருமணமாகி விடுகிறது. அவரது மகன் பார்த்திபன் படித்துத் தலைமையாசிரியராகவும் ஆகிவிடுகிறார். இந்தப் பார்த்திபனின் ம்கள்தான் நிர்மலா.
நிர்மலா சுயசிந்தனை, சுயமரியாதை, பகுத்தறிவு கொண்ட பெண்ணாக வளர்ந்ததுடன், கல்லூரிப் பேராசிரியராகவும் ஆகிவிட்டார். காதல் வயப்படும் போது, எந்தவொரு பெண்ணும் தன்னுடைய நிலையிலிருந்து தவறிவிடும் அபாயம் இருக்கிறது என்பதற்கு நிர்மலாவும் விதிவிலக்கல்ல. மனோஜின் மீது மயக்கம் கொள்கிறாள், குடும்பத்தினரின் எச்சரிக்கைகளையெல்லாம் கடந்து அவனையேத் திருமணம் செய்து கொள்கிறாள். ஒரு ஆண் குழந்தையையும் பெற்றுக் கொள்கிறாள். மனோஜ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப் போகிறான். அவனைக் குடிப்பழக்கத்திலிருந்து எப்படியும் மீட்டுவிடலாம் என்கிற அவளது அனைத்து முயற்சிகளும் தோல்வியடைகிறது. அவளது நம்பிக்கையும் தகர்ந்து போகிறது.
மனோஜ்க்கு மதுப்பழக்கம் மட்டுமில்லை, தான் ஆண் என்பதால், தன் மனைவியான பெண் தன்னுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்கிற ஆணாதிக்கக் குணமும் மேலோங்கி இருக்கிறது. அவனுடைய ஆணாதிக்கத்திற்கு நிர்மலா அடிபணியாததால், அவர்களிருவருக்குமிடையில் அடிக்கடி சண்டையும் வருகிறது. முடிவில், அவனை விட்டு விலகித் தனித்து வாழத் தொடங்குகிறாள். கணவன் எப்படி இருந்தாலும், அவனுடன் சேர்ந்து வாழ வேண்டியதே நம் பண்பாடு என்று சொல்லும் சமூகத்தின் சொற்களையெல்லாம் கடந்து தனித்து வாழ்கிறாள். மனோஜ் மணமுறிவு கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறான். நிர்மலா மணமுறிவு தர முடியாது என்று மறுக்கிறாள்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் வழக்கு முடிவுக்கு வருவதற்கு முன்பாக, மனோஜின் வாழ்க்கை முடிவுக்கு வர முந்துகிறது. குடிப்பழக்கத்தினால் பாதிக்கப்பெற்ற அவனது கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கியிருந்தன. அவனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று, அவனது பெற்றோர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், அவனது சிகிச்சைக்கான பெரும் பணத்தைப் புரட்ட முடியாமல் தவிக்கின்றனர். நிர்மலாவின் காதுகளுக்கும் அந்தச் செய்தி வந்து சேர்கிறது.
தன்னுடையக் கணவனைக் காப்பாற்ற அவளும் முயற்சிக்கிறாள். ஆதிபட்டியிலிருந்த அவளது தாத்தாவின் நிலத்தை தந்தை பார்த்திபன் விற்றுக் கொண்டு வந்து பணத்தை அவளிடம் கொடுக்கிறாள். மனோஜின் மருத்துவச் செல்வுக்கான பணம் அனைத்தையும் அவள் செலுத்துகிறாள். அதன் பிறகு, மனோஜ் விருப்பப்படி அவன் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்த மணமுறிவுக்குச் சம்மதித்து மனு ஒன்றைத் தாக்கல் செய்யும்படி வழக்கறிஞரிடம் தெரிவிப்பதாகக் கதை முடிவடைகிறது.
கதையில் மனோஜ் எப்படி குடிப்பழக்கத்திற்கு அடிமையானான்? மணமுறிவுக்கு மறுத்து வந்த நிர்மலா முடிவில் மணமுறிவுக்கு ஏன் சம்மதிக்க வேண்டும்? மணமுறிவு முடிவுக்கு வந்த நிர்மலா, தாத்தா பெயரிலிருந்த நிலத்தை விற்றுக் கிடைத்த பணத்தைக் கொடுத்து, மனோஜைக் குடிப்பழக்கத்திலிருந்து காப்பாற்ற ஏன் முயற்சிக்க வேண்டும்? என்பது போன்ற சில கேள்விகளுக்கு விடையில்லாமல் போகிறது...!
இருப்பினும் நிர்மலாவின் கதை, குடிப்பழக்கம் கொண்ட கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து வரும் பெண்களின் அவல நிலையை எடுத்துச் சொல்கிறது. அத்துடன், பெரும்பான்மையான ஆண்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்த மது விற்பனையை அரசு அதிகரித்துக் கொண்டிருப்பது ஏன்? என்கிற கேள்வியையும் நமக்குள் எழுப்புகிறது.