'இவனே என்கிற மனிதன்' என்கிற சிறுகதைகள் தொகுதி எனக்கு வாசிக்கக் கிடைத்தது. இருபத்தைந்து சிறுகதைகளடக்கிய இத்தொகுதியின் முதல் சிறுகதையே நூலின் தலைப்பாக அமைந்து போனது சிறப்பு.
வித்தியாசமான அணுகுமுறையோடு சித்தரிக்கப்பட்ட கதை.
மகாகவி, சிகரம், இனிய நந்தவனம், முங்காரி, செங்கரும்பு, வெல்லும் தூய தமிழ், புதிய உறவு ஆகிய சிற்றிதழ்களில் வெளிவந்துள்ள சிறுகதைகளை ஒருசேர வாசிக்கும் வாய்ப்பினை நூலாசிரியர் சந்திரா மனோகரன் தந்துள்ளார்.
இதழாளர், கவிஞர், எழுத்தாளரான இவரது நான்காவது சிறுகதைத் தொகுதியாகும். மேலும் சற்றொப்ப 15 நூல்களை புதினம், குறுங்கதை, புதுக்கவிதை, குறள்வழிக் கதைகள், நாட்டுப்புறக் கவிதை, தன்முனைப்பு, சிறுகதைகள், சிறுவர் கதைகள் என பரந்துபட்ட பன்முக அனுபவங்களைக் கொண்ட நூலாசிரியர் நூலை வெளியிட்டிருக்கிறார் என்பது சிறப்பு செய்தி.
எல்லா சிறுகதைகளின் அடிநாதமாக அன்பின் ஆழங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மறக்கமுடியாதவர்கள், தொலைந்து போனவள், நான் கவிஞனுமில்லை, தரித்திரம் ஆகிய சிறு கதைகளில் தத்துவ விசாரங்களைக் கலந்து தந்துள்ளார் நூலாசிரியர்.
இந்த தொகுதிக்கு வதிலைபிரபா, ஸ்டாலின் குணசேகரன், காஞ்சி வி. தங்கராஜ் ஆகியோர் மிக அருமையாக அணிந்துரைகளை வழங்கியுள்ளனர்.
கதைகளிடையே ஒரு மனிதரைப் பார்த்ததும் அவர் உருவம் அப்படியே ஈர சிமெண்டில் பதிந்த கை மாதிரி அமர்ந்தது. (பக். 56)
மருதமுத்து வாத்தியாரைப் பற்றிய நடத்தைகளைச் சொல்லி, அரசியல்வாதிகளுக்கு 'கையூட்டு' கொடுத்து நல்லாசிரியர் விருது பெற்றது - சுவைபட சொல்லுகிறார். (பக்.77)
காலத்தின் கோலம் எனும் சொலவடையை - 'காலம் எப்படி வேண்டுமானாலும் கோலம் போடுமே! அதன் உரிமையை யார் தடுக்க முடியும்' என தனது மொழியில் உருவகமாக்கியுள்ளார். (பக். 81)
இதுபோன்ற இலகுவான உத்திகளை கதைகளில் படித்து ரசிக்க முடிகிறது.
பொதுவாக ஒரு நூலை கையில் எடுத்ததுமே தரத்தை அறிந்துகொள்ள தீவிர வாசகனால் கண்டடைய இயலும். காரணம் அட்டைப்படம், அச்சு, தரமான தாள்கள், வடிவமைப்பு, படிப்பவரை கண்கள் உறுத்தாத வகையிலான எழுத்துருக்கள் ஆகியன சிறப்பாக இருக்க வேண்டும்.
முக்கியமாக வாசிப்பின்போது தடையேற்படுத்தும் அச்சுப் பிழைகள், சரியான 'மெய்ப்பு' திருத்தத்தால் சாத்தியப்படும். இவையெல்லாம் துல்லியமாக கணித்து, கவனத்துடன் நூலை வெளியிடுவது இக் காலத்தில் துர்பலம்.
கட்டமைப்பும்,ஒரு நூலின் சிறப்புக்கு உறுதுணை. ஆனால் முன் சொல்லப்பட்ட அனைத்தும் கரிசனத்துடன் செயலாக்கப் பட்டுள்ளது. நூல் வெளியீட்டாளர் 'ஓவியா பதிப்பகம்' மிகுந்த பாராட்டுக்கு உரியவர்கள்.
இது போன்ற வித்தியாசமான உத்திகளோடு கூடிய சிறுகதைகள் வெளிவரவேண்டும். மொழி சிறக்க, உலக தரத்துக்கு எட்ட தமிழ் சிறுகதைகள் சந்திரா மனோகரன் போன்றவர்களால் இயலும் என்பது என் முடிவு.
பெரிய இடைவெளிக்குப் பின் நல்ல சிறுகதைகளை தமிழில் படிக்க வாய்ப்பு கிடைத்தது நான் பெற்ற பேறுகளில் ஒன்றாகும்.
நூலாசிரியர் சந்திரா மனோகரன், பதிப்பாளர் வதிலைபிரபா இருவரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதை இந்நூலைப் படிப்பவர்கள் அறிய முடியும். அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் மட்டுமல்ல பாதுகாக்கப்பட வேண்டிய நூலாகும்.