விழியோரத்தில் கசியும்
கண்ணீர்த் துளிகள்
விழித்தபின் உணரும்
உறக்கத்தின் லயிப்பு
அந்தி நேரம் விடைபெறும்
சூரியன்
எல்லோரும் பார்க்கும் காட்சிகளே ரசனையில் பூரித்து விம்மும் மனசுக்கு புதிர்ப்புனிதங்களாக கிளர்ச்சியூட்டும், போதையேற்றும் இயற்கையழகை ஒரு புகைப்படம் போல கவிதையில் வைக்கும் திறமைக்கு சதுரங்கம் தொகுப்பு உதாரணமாகிறது.
பேருந்து நிறுத்தமருகில் கையேந்தும்
பிச்சைக்காரன்
தனது கனவுகளில்
யாருக்குப் பிச்சையிடுவான்
எனும் கவிதை சமூகக் காட்சியை முன் வைக்கின்றது. அன்றாடம் தெருவிற்குத் தெரு கண்ணில்படும் பிச்சைக்காரர்களை நாம் எந்த சலனமுமின்றி கடந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் பற்றிய நகைச்சுவைகளும், அவர்களின் வருமானம் பற்றிய நமது எள்ளல்களுமே பிச்சைக்காரர்கள் பற்றிப் பதிவு பெற்றுள்ளது. ஆனால் நூலாசிரியரின் இந்தக் கவிதை அவர்களை புதிய கோணத்தில் பதிவு செய்கிறது. வாசகர்களின் சிந்தனைக்குப் பகுதிக் கவிதையை விட்டு வைக்கும் இந்த உத்தி பெரும்பாலும் ரசிக்கப்படும் கவிதைகளின் உத்தி.
வாசகரின் சிந்தனா சக்திக்கு விருப்பத்திற்குப் பதில் எழுத ஒரு கேள்வியை விட்டுச் செல்கிறது கவிதை. ஆனால் நாம் எழுதும் பதில் ஒரு போதும் பிச்சைக்காரர்களைப் பற்றிப் பேசாது நம்மைத்தான் பிரதிபலிக்கும்.
ஒற்றை ரோஜா கவிதை சமகாலத்தின் இளைய மனத்தினரின் பதிவு.
ஒற்றை ரோஜாவை
ஏற்க மறுத்த அவள்
இன்று
மலர் வளையத்தோடு வந்து
உட்கார்ந்திருக்கிறாள்
என் சடலத்தின் அருகில்
எழுத்து வடிவில் உரைரடைச் சாயல் மிகுந்திருந்தாலும் அழகியல் கவிதை. பார்த்துப் பதிவு செய்ததாய்த் தோற்றம் தருகிறது.மனதால் உள்வாங்கப்பட்ட, உணரப்பட்ட கவிதை. இதனினும் சிறப்பான வெளிப்பாடைக் கொண்டு தரும். இன்றைய சூழலில் காதாலும், பருவ உணர்வுகளும் தன்னியல்பாய்த் தோன்றுவதினும் பெரும்பான்மையாக வெளி ஊடகங்களின் திணிப்புகளின் விளைவாய்த் தோன்றுவதே. அதன் சமூகத் தோல்விக்கு முழுக்காரணம். உள்ளார்ந்த அன்பை விவரிக்கும் போது அது உறவுகளற்ற ஒரு வெளியில் வாசகனையும் கண்ணீர்கசிய பெருமிதம் கொள்ள வைக்கும்.
சதுரங்கம் தொகுப்பின் சிறந்த கவிதையென நான் கருதுவது “கை” கவிதையைத்தான். இனி கைகுலுக்கல் நிகழும் இடங்களில் இதன் வரிகள் சலனத்தில் முகம் காட்டும். அதுவே இக்கவிதையின் வெற்றியும் ஆகும்.
இரவில் பூட்டைத் திறப்பதும்
பெண்கள் பாலியல் வன்முறைக்கு
உள்ளாக்குவதும்
மதுபாட்டில்களைத் திறப்பதும்
மனைவி மீது மண்ணெண்ணெய்
ஊற்றுவதும்
கத்தியை இறக்குவதும்
லஞ்சம் கேட்பதும்
பதுக்கி வைப்பதும்
போலி சினேகத்துடன்
உங்கள் கரங்களைக்
குலுக்கும் கைகள்
இவைகளாகவும் இருக்கலாம்.
அழகியலும், யதார்த்த வன்முறைகளும் ஒன்று சேர்ந்து மிகுந்த சுவையுடன் பதிவாகியுள்ளது “கை”.
சுருக்கமும் வார்த்தைச் செறிவும் கொண்டிருந்தால் “அத்தி” போன்ற கவிதைகள் இன்னும் சுவையாகும்.
எந்தப் பெயரைக் கூறினாலும்
எதிரொலிக்கிறது
மலை
இறந்தவரின் பெயரை
கூவுவதில்லை யாரும்! போல
ஒளிவட்டம் கவிதை நடுத்தர, ஏழை, எளிய மக்களின், உலகத்தோடு ஒட்டிச் செல்லும் நிர்பந்தத்தின் கசப்பை பட்டவர்த்தனமாகப் பேசுகிறது. யோசித்துப் பார்த்தால் எல்லா மனிதரும், தான் அச்சப்படுபவனாகவும், அச்சப்படுத்துபவனாக சிலரிடமும் இருப்பது மனித இயற்கையாகவே வரலாறு பதிவு செய்கிறது.
சாதீய அடுக்குகளும், வர்க்க அடுக்குகளும் இந்த மனித புத்தியைக் கொண்டே வேர் கொண்டு வாழ்கின்றன. கவிஞர் உள்ளம் கவிதை எழுச்சி கொள்ளும் போது வரும் எழுத்துக்கள் எப்போதும் அதீத கவிதை வளத்துடன் வரும். அதே சமயம் வலிந்து எழுதப்படும் கவிதைகள் அந்தக் கவிதைகளோடு வாசிக்கையில் சில நேரங்களில் சலிப்பு தட்டி விடும்.