புத்தகங்களால் சூழப்பட்ட அறிவுலகின் பரப்பினுள்ளே பல சமயங்களில் சோர்வை ஏற்படுத்தும்படியான புத்தகங்களையும் படிக்க வேண்டி வரும். சில சமயம் வாங்கிவிட்டு வருந்த வேண்டி வரும். எழுதப்பட்டவையே மறுபடி மறுபடி பிரதியெடுக்கப்படும். விற்பனை சார்ந்த நூலாக்கங்களில் வாசிப்பினின்று விலகும் பொழுதுகளில், நம்மை தன் வசம் கொள்ள சில படைப்புகள் வருவதனாலேயே, ஆதியந்தமற்ற சொர்க்க - நரகங்களை, மலை மடுவுகளை சில சொற்களில் தரிசிக்கும் ஆவல் தீராதுள்ளது.
சென்னை, கௌதம் பதிப்பகம் தந்துள்ள “ஞானவியல்” நூல் அந்த ஆவலை உயிர்ப்பிக்கும் அரிய படைப்பாக தமிழுக்கு வந்துள்ளது. அறிவு சார்ந்த, ஞானம் சார்ந்த மரபினிலிருந்து பொழுது போக்கும், தற்காலிக இன்பமுமாய் விலகிவிட்ட நமது தற்காலச் சூழலில் ஞானவியல் எனும் இந்த சீனத் தத்துவ நூலை வாசிப்பதோ, புரிந்து அனுபவிப்பதோ மலைப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தியது. நாள்பட்டுப்போன நல்ல வாசிப்பைத் திரும்ப அடைவதற்கும், சிந்தனையைத் தெர்விப்பதற்கும், பொறுமையான வாசிப்பிற்கு இடம் தந்து பதிப்பிக்கப்பட்டுள்ளது. எளிய கவிதை நடையும், ஒரு பக்கத்துக்கு ஒரு தத்துவமாய் அழகிய வடிவமைப்பில் பதிப்பித்த விதமே படிப்பிக்கிறது.
மனத்தின் சூட்சுமத்தை அறியக் கூடிய வழி அவன் மனமே. புற உலகின் மாயையை விலக்கி அகத்தினை பிரகாசமாக வைத்து விட்டால் ஞானம் நமக்குக் கிடைக்கும்.
“சொல்லக் கூடிய ஞானம் நிலையான ஞானமல்ல”
“ஆசையற்ற ஒருவர் அதன் சாரத்தை காண்பார்”
“ஆசையுடன் இருப்பவர் அதன் வெளிப்பாடுகளைக் காண்பார்”
நிலையான ஞானத்தை அடைய மனத்தினை சுத்தப்படுத்தி வையுங்கள். பிறகு எல்லாம் கிடைக்கும்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நமது ஞானிகளும் சித்தர்களும் ஏன் வெகுமக்களும் போகிற போக்கில் உதிர்த்துச் செல்லும் அனுபவப் பதிவுகள் தத்துவமாய்ச் சாரம் பெற்றுள்ளன. தீதும் நன்றும் பிறர் தர வாரா...
“கல் பொழுது இறங்கும்
மல்லல் பேராற்று நீர்வழிப்படுவும்
புனல் போல வாழ்க்கை”
என்ற மூன்று வரிகளில் வாழ்வின் சாரத்தை அள்ளித்தந்த கணியன் பூங்குன்றனைப் போன்ற பெரியோர்களின் சிந்தனைப் பதிவுகள் கண்ட நமக்கு, ஞானவியல் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் “அட” என வியக்க வைக்கும் வரிகள் ஒளிர்கின்றன. உதாரணமாக இரண்டாம் அத்தியாயத்தில்;
“உலகம் எப்பொழுது அழகை அழகு என்று அறிகின்றதோ
அப்பொழுது அசிங்கம் தோன்றுகிறது.
அது எப்பொழுது நன்றை நன்றாக அறிகின்றதோ,
அப்பொழுது தீது எழுகின்றது”
என்கிற வரிகள் இங்கே குறிப்பிடத்தக்கவை. எதிர்த் துருவங்கள் ஒன்றை ஒன்று உருவாக்குகின்றன். எதிர் எதிரே இருப்பதாலேயே அவை பொருளுடையதாகின்றன. வருடமெல்லாம் உழைத்து உருவாக்கினாலும் அதைச் சொந்தம் கொண்டாட அதில் ஒன்றுமில்லை. பலரின் உழைப்பு ஒரு இடத்தில் நிறைவடைவதாகவே கொள்ள வேண்டும். பிஞ்சுப் பாதங்களும், தளர்ந்த நடைகளும் சுட்டிச் சென்ற ஒற்றையடிப் பாதைகளே இன்று பெரிய, மிகப்பெரிய சாலைகளாக மாறியுள்ளன. இன்றைக்கு கல் சுமந்த தார் விட்ட வரைபடம் வரைந்து ஆக்கிய பலருக்கும் முன்பொரு உழைப்பு இருப்பதை உணர்த்தும் பின் வரிகள்.
உடல் குறித்தும், ஆன்மா குறித்தும் பல்வேறு விதமான ஆன்மீக விளக்கங்கள் இருக்கின்றன. சமயங்களில் குழம்பிவிடும் மனதுக்கு அத்தியாயம் 11 ல் தரும் விளக்கம் எளிய சாட்சிகளை முன் வைக்கிறது.
“களிமண்ணைக் குழைத்துச் செய்த சட்டியில்
அதன் வெற்றிடத்தில்தான் சட்டியின் பயன்பாடே உள்ளது.
கதவுகளையும் சன்னல்களையும் வெட்டி ஒரு அறையை
உருவாக்கினால்
அதன் வெற்றிடத்தில்தான் அறையின் பயன்பாடே உள்ளது”
எது வெறுமையாக உள்ளதோ அதுதான் பயனுடையதாக இருக்கிறது. சட்டி - உடல். ஆன்மா - வெற்றிடம். கவிதை ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு பொருள் தருவதாகவும் மொத்தம் சேர்ந்து வேறு பொருள் தருவதாகவும் இருக்கிறது. ஆயினும், நூலாசிரியர் சு. தீனதயாளன் தந்திருக்கும் குறிப்புகளைக் கண்டால் கவிதை வேறு ஒரு கருத்துக்கும் நம்மை இட்டுச் செல்கின்றது. குறிப்பைப் படிக்காமலும், படித்துவிட்டும் மறுபடியும் படிப்பது ஒரு தனி சுகமாய் இருக்கிறது. சுவையைத் தந்து சிந்தனையைக் கிளறுவதாக இருக்கின்றன. ஒவ்வொரு வரிக்கும் ஓராயிரம் பொருள்கள் சொல்ல, வெகு சுலபமாக மிகச்சில வரிகளின் குறிப்பில் அவற்றைச் சுட்டிச் சுருக்கிச் சொல்லும் ஆசிரியரின் திறன் போற்றுதலுக்குரியது.
”சிறந்த வழி மறைத்துக் கொண்டுள்ளது”
புத்திசாலித்தனம் முன்னுக்கு வருகிறது
பெரிய ஏமாற்று வேலை நடக்கின்றது.
போலித்தன்மை எல்லா உறவுகளிலும் நுழைந்து விட்டது. இவை உறவுகளில் மட்டுமா? என்கிற கேள்வியும் நமக்குள் எழுகிறது. உண்மை ஒளிந்து கொள்கிறது அல்லது ஒழிக்கப்படுகிறது. போலித்தன்மையானவையே முன்னுக்கு நிற்கின்றன. பின் அவையே உண்மையைப் போல் வேடம் கொள்கின்றன. ஒளிந்து கொண்டு விட்ட “உண்மை” யார் கூடினாலும், கடவுளே ஆணையிட்டாலும் உண்மை முன்னுக்கு வர வாய்ப்பிருக்கிறதா? போலிகளின் காலடிகளில் நசுங்கி ஊசலாடும் உண்மையின் பதுங்கு குழிக்குள் யார் நுழைவார்?
வளைந்து கொடு! அதே சமயம் நேராய் நில் என அதே குரலில் பேசுகிறது இந்த நூல். தாழ்வாய் இருந்து நிரப்பிக் கொள்.
“அவர்கள் போட்டியிடாததால், உலகம் அவர்களிடம் போட்டியிட முடியாது”
எனும் வரிகள் ஏனோ நமக்கு இடைத்தேர்தல்களை நினைவூட்டுகின்றன. ஞானிகள் பற்றியயும் அவர்களின் குணநலன்கள் பற்றியும் பேசும் இவ்வரிகள் இவ்வரிகள் நமக்கு தற்காலப் போக்குகளையும் நினைவூட்டுவது தொடர்பில்லாத ஒன்றுதான். நூலின் வரிகள் ஒவ்வொன்றும் இந்த சிந்தனைகளையே நெருக்கம் கொள்ளச் செய்கின்றன.
“யார் தங்களைத் தாங்களேப்
புகழ்ந்து கொள்கிறார்களோ
அவர்களுக்குத் தகுதியில்லை”
“யார் தங்களைத் தாங்களே
பீற்றிக் கொள்கிறார்களோ
அவர்கள் நிலைப்பதில்லை”
யார் தங்கள் ஆசிரியர்களை மதிக்கவில்லையோ, யார் தங்கள் சிந்தனைக்குக் காரணமானவர்களை நினைவு கொள்ளவில்லையோ அவர்கள் புத்திசாலிகளாய் இருந்த போதிலும் குழம்பியே உள்ளனர்.
விவரங்களைக் காண்பது தெளிவு எனப்படும். மிருதுவானதைப் பற்றிக் கொள்வது வலிமை எனப்படும். மக்கள் அதிகாரங்களைக் கண்டு பயப்படாத போது மாபெரும் சக்தியாக வெளிப்படுகின்றன.ஆட்சியாளர்கள் வாழ்வாதாரங்களை மக்களுக்குத் தந்தால்,அவர்கள் எந்த நிலையிலும் உங்களை விலக்கி வைக்க மாட்டார்கள்.
எதிர்ப்பதில் துணிந்தவன் கொல்லப்படுகின்றான்.
எதிர்ப்பதில் துணியாதவன் பிழைத்துக் கொள்கிறான்.
மக்களின் வாழவாதாரங்கள் சுரண்டப்படும் போதும், சூறையாடப்படும் போதும் எதிர்த்தவர் கொல்லப்படும் தற்போதைய சூழலில் இவ்வரிகள் முன் சொன்ன வரிகளோடு முரண்படுகின்றன. சீனத் தத்துவஞானியின் தத்துவ நூல் மொழியாக்கம் முழுமையான ஆன்மீக வழியில், ஞானிகளின் இயல்பு நம்மைப் பற்றிப் பேசும் போதும் முழுமையாகவும் சமூக அரசியல், தனி மனித வாழ்வு என எல்லா மட்டங்களையும் இன்றைக்கான பதிவு போல் சொல்லப்பட்டுள்ளது. இருவேறு அத்தியாயங்களின் வரிகள் முரண்பட்டதாகத் தோன்றினாலும், ஒரு பொருள் குறித்தவையாய் இயைந்து தோன்றுவதும் தத்துவத்தின் சிறப்பே. இந்நூலை ஆக்கிய சு. தீனதயாளன் போற்றுதலுக்குரியவர். இதைப் பதிப்பித்த கௌதம் பதிப்பகம் பாராட்டுக்குரியது.
எழுத நினைத்து அடிக்கோடிட்டு குறிக்க நினைத்தால் முழு நூலையும் அடிக்கோடிட வேண்டும். அனைவரும் வாசித்துப் பாதுகாக்க வேண்டிய ஒரு நூல் “ஞானவியல்”
“மிருதுவானதும் வளைந்து கொடுக்கக் கூடியதுமே
உயர்ந்த நிலையப் பிடித்துக் கொள்ளும்”
வானுலக வலை விசலமானது, தளர்ந்தது. ஆனாலும்,
எதையுமே நழுவியோட விடுவதில்லை.
ஞானவியலும் கூட”