அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுக்களும்
ஆசிரியர் |
வைகை அனீஷ் |
பிரிவு |
வரலாறு |
பக்கங்கள் |
80 |
பதிப்பு |
2014 |
ISBN |
----- |
விலை |
ரூ.30/- |
பதிப்பகம் |
அகமது நிஸ்மா பப்ளிகேஷன்ஸ் |
முகவரி |
3, பள்ளிவாசல் தெரு, தேவதானப்பட்டி, தேனி மாவட்டம். |
தொலைபேசி எண் |
----- |
அலைபேசி எண் |
9715795795. |
புத்தகப் பார்வை:
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பழைய நினைவுகளை அவ்வப்போது நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறான். மாறி வரும் புதிய வாழ்க்கைப் பயணத்தில் பழைய நினைவுகளை அசை போடுவதகென்றே ஒவ்வொரு மனிதனும் புகைப்பட ஆல்பங்கள், விருப்பப்பட்ட பொருட்கள் போன்றவைகளைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறான்.
பண்டைய காலத்திலிருந்தவர்கள் தங்களுடைய நினைவுகளை ஓலைச்சுவடிகளின் வழியாகப் பாதுகாத்து வைத்திருந்தனர். அந்த ஓலைச்சுவடிகள் மற்றும் பண்டைய பயன்பாட்டுப் பொருட்கள் போன்றவை அவர்களின் வாழ்க்கை முறையினையும், அவர்களது பண்பாடுகளையும் விளக்குவதாக அமைந்திருக்கின்றன. பண்டைய மன்னர்கள் தங்களுடைய ஆணைகளையும், அறிவிப்புகளையும் மக்களுக்கு அறிவிப்பதற்காகக் கல்வெட்டுக்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இந்தக் கல்வெட்டுக்களிலுள்ள செய்திகள் வழியாக, நாம் பண்டைய காலங்களின் அரசு நடைமுறைகள், மக்களின் பண்பாடுகள் போன்றவைகளை அறிய முடிகிறது.இதுபோல், கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் கட்டிட அமைப்பு முறைகள், சிற்பங்கள் அமைப்பு மற்றும் அவற்றில் காணப்படும் உத்திகள், ஓவியங்கள் மூலம் அக்கால ஆடை, அணிகலன்கள், சமூகத்தின் நிலை வழிபாட்டு முறைகள் என்று பண்பாடுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ள் முடிகிறது.
இவையனைத்தும் நம் முன்னோர்களைப் பற்றிய நினைவுகளின் பதிவுகளாக நம்மை மகிழ்ச்சி அடையச் செய்கின்றன.
தேனி மாவட்டத்திலும், அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டத்திலும் வாழ்ந்த முன்னோர்கள் குறித்த செய்திகள் சில வரலாற்றுப் பதிவுகளாகக் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கல்வெட்டுக்களின் மூலம் மதுரையை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சிக் காலங்களில் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாயக்க மன்னர்களால் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்கள் எனப்படும் ஜமீன்கள் தலைமையிலான குறுநில ஆட்சி முறைகள் குறித்தும், இந்தப் பகுதியிலிருக்கும் பல ஊர்கள் குறித்தும் சில சிறப்பான தகவல்களை அறிய முடிகிறது. இந்தக் கல்வெட்டுகள் குறித்த பல சுவையான தகவல்களை அதற்கான படங்களுடன் சேர்த்து, “அழிந்த ஜமீன்களும் அழியாத கல்வெட்டுக்களும்” எனும் தலைப்பில் நூலாகத் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் வைகை அனீஷ். இந்த நூலுக்கு எழுத்தாளர் முனைவர் ப. பானுமதி அணிந்துரை அளித்திருக்கிறார்.
இந்த நூல் நூலாசிரியரின் முதல் முயற்சியாக இருப்பதுடன், அவருடைய சொந்த வெளியீடாகவும் இருப்பதால் சிறு சிறு குறைகள் தென்பட்டாலும், நூலாசிரியரின் தனிப்பட்ட முயற்சியை நாம் பாராட்டலாம்.
-தாமரைச்செல்வி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|