வதிலை பிரபாவின் படைப்புகளைத் திறனாய்வு செய்யும் தகுதி எனக்கில்லை. பாராட்டும் அறிவு இருக்கிறது. வார்த்தை நாணயத்தோடு எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். 'அவையஞ்சார் ஆகுலச்சொல்லாக அமையாது' என்ற நம்பிக்கையுடன்.
திரு. அமரன் அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்ட வகைப்பாடுகளுக்குள் என்னால் சிக்கிக்கொள்ள இயலாது. காரணம் "ச்சீ. காட்டுமிராண்டி" என்ற அண்ணன் அறிவுமதியின் ஒற்றை வரியில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களை வரம்பிட முடியாது. உணர்ச்சியோடுதான் அணுக முடியும். அவ்வித அணுகுமுறையே இதுவும்.
“உன்னிடத்திலுமா
இத்தனை நிறபேதங்கள்
வானவில்லே?”
என்கிற சமுதாயச்சாடல் அழகுணர்ச்சியில் இருந்து பிறந்திருப்பது அருமை.
”உலர்ந்த மணலில்
உறைந்து கிடக்கும் விதை.
விழுந்தது மழைத்துளி”
களவா, கற்பா, இயற்கையா இல்லை உங்கள் கவிதையா எனப் பல்வேறு காட்சிகளை மனம் திரையிட்டுப் பார்க்கிறது.
“ஆழிப்பேரலை
அள்ளிச்சென்றது
ஜாதி முட்களை”
அற்புதமான பதிவு இது. மனிதர்கள் ஜாதிகளை இழந்துவிடவேண்டும் என்பதற்காகவே இயற்கை அடிக்கடி கோபப்பட வேண்டும் என்று தோன்றுகின்றது.
“காற்றிலாடும்
ஒற்றை இறகு
வசப்படுமா வானம்?”
என்ற கேள்வியினூடே...
“காற்றில் அலையும்
உதிர்ந்த சிறகொன்றை
முந்தும் பறவை”
என்ற நம்பிக்கை விதையும் விதைக்கப்படுகிறது.
“யானைக்கூட்டம்
ஊருக்குள் நுழைந்தன.
காடு தேடுமோ?”
மனிதனின் ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தும் அருமையான உத்தி.
“ஆடம்பர விழா
சிதறிக்கிடந்தன பண்டங்கள்
மொய்க்கும் விழிகள்”
இது இந்தச் சமூகத்தின் ஒரு பக்கம்.
“தேநீர் குடிக்க
தேநீர்க் கடைக்காரன்
தேநீர் போடுகிறான்”
வாழ்க்கையை எளிமையாகப் புரியவைக்கும் வரிகள்.
“தொலைதூரப் பயணம்
இருக்கையில் உறைந்து கிடக்கும்
அலைகிற மனசு”
எப்படிப்பட்ட விடுதலை? உணர்ந்தும் பார்க்கலாம். தத்துவமாகவும் பார்க்கலாம்.
மிச்சமிருக்கிற காதலும், காற்றைப் புயலில் இருந்து பிரித்தெடுக்கும் புல்லாங்குழலும், "மியாவ்" பூனையும், ஓய்வெடுக்கும் துடுப்பும், இறந்து கிடந்த வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களும் வாழ்க்கையை சொல்லிக் கொண்டே போகின்றன. மொத்தத்தில் எல்லாக் கவிதைகளும் மூன்று வரியில் முப்பது வரி பாராட்டுக்குரியன.
வெவ்வேறு கருத்துக்களை உணர்த்தினாலும் சில உவமைகள் மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்த்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. மொத்தத்தில் சாம்பல் நிறப் பூனை, வண்ணத்துப் பூச்சியின் வண்ணங்களோடு... மனமுவந்த பாராட்டுக்கள்.
ஆங்கிலம் அதிகம் அறிந்தவனில்லை நான்... எனினும், மூலத்தின் கவிதை நயமும், அழகும் மொழிபெயர்ப்பில் இல்லாதது போல் எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக அண்ணன் அறிவுமதியின் "உண்டு உண்டு வட்டியும் முதலும் " என்பது வழக்குச் சொல். அது அப்படியே"Beware of principal with interest" என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பது.
You will pay dearly for it. You will go to rock and ruin. Get your just deserts. You will have retribution. You will get your comeuppance. இப்படிப் பல வழக்குகள் ஆங்கிலத்தில் உண்டு.
அதைப் போலவே உங்கள் கவிதைகளின் மொழிபெயர்ப்பில் எனக்கு நிறைய உடன்பாடில்லை.
உதாரணமாக;
"மெல்ல அவிழும் விடியல்" இதில் அவிழும் என்பதில் உள்ள கவிதை அழகு "brightening dawn" ல் என்னால் உணர முடியவில்லை.
மியாவ் பூனை என்பதற்கும் The cat's "meow" தூரம் அதிகமாக இருப்பதுபோல் உணருகிறேன்.
ஊரும் எறும்புகள் - the slow ants
நினைவுக்கரு - embryo of memory
உப்புக்கரிக்கும் காதல் - love tasting salty
சொந்தம் தேடும் விழிகள் - developing relationship
- இப்படிக் கவிதையின் தனித்துவம் மொழிபெயர்ப்பில் காணவில்லையோ என்ற எண்ணம். நான் சரியா? என்பதை மற்றவர்கள்தான் எனக்குப் புரிய வைக்க வேண்டும்.
மற்றபடி உங்கள் சாம்பல்நிறப் பூனை என் புத்தகங்களோடு பதுங்கிக் கிடக்காது. சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.
தோன்றியதை எழுதிவிட்டேன். நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் அல்ல.