‘எச்சம்’ எனும் சொல்லிற்குப் பல பொருள் இருந்தாலும், வள்ளுவர் கூறும் ‘எஞ்சி நிற்கும்’ எனும் பொருளையே இந்நூலின் தலைப்பு குறிப்பிடுவதாக நூலாசிரியர் வாணமதி தனது உரையில் விளக்கித் தந்துள்ளார். அந்த உண்மையைக் கதைகளைப் படித்து முடித்த போது புரிந்து கொள்ள முடிகிறது.
சற்று நீண்ட சிறுகதைகளாக இருப்பினும், நேரில் காண்பது போன்ற உணர்வை, நம் மனத்திரையில் காட்சிப்படுத்திக் காட்டுகிற எழுத்தின் நடை, இலங்கையில் வழங்கும் பேச்சு நடையிலிருந்தாலும் படிப்பதற்கு அலுப்பு தட்டாமல் அடுத்து என்ன நிகழும் என்கிற ஆவலைத் தரும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்நூலிலுள்ள ‘மாற்றம்’ என்ற முதல் சிறுகதையே, புலம் பெயர்ந்தோர், புதிய நாட்டில் எவ்வாறான துன்பங்களைச் சந்திக்க நேரிடுகிறது என்பதை நமக்குப் புரிய வைத்து விடுகிறது. “அழும் குரலைக் கேட்டு ஓடி வரும் வாழ்வியல் சூழல் கூட அங்கு இல்லை” என்று அக்கதையில் குறிப்பிடுவதே அதற்குச் சான்றாக அமைந்து விடுகிறது.
‘அவளும் பெண்தான்’ எனும் சிறுகதையில் புலம் பெயர்ந்ததற்கான காரணம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதைப் படிக்கும் போது நெஞ்சம் கனத்துப் போய்விடுகிறது.
பெரும்பான்மையான கதைகளில், புலம் பெயர்ந்து வேற்று நாடுகளுக்குச் செல்லும் பெண்கள், தங்களை அந்நாட்டின் வாழ்வியல் நிலைகளுக்கேற்றபடி தங்களை மாற்றிக் கொள்ள அக்கறை காட்டாததும், அதனால் அவர்கள் படும் துன்பத்தையும் அழகாக எடுத்துரைக்கிறது.
அனைத்தும் கதைகளிலும் புதிய சிந்தனை, புதிய பார்வை கொண்ட புதுமைப் பெண்ணாக, குறிப்பாக கதையில் வரும் நாயகிகள் பாரதி, மது போன்ற பெண் பாத்திரம், பெண்கள் காண வேண்டிய மாற்றம், அவர்கள் அடைய வேண்டிய முன்னேற்றம் என்னவென்பதைப் பற்றியே சொல்கிறது. அதையும் உளவியல் நடைமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர் சொல்வதால் இந்நூலைப் படிக்கும் பெண்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வைத் தருமென நம்புகிறேன்.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் பதின்மூன்று கதைகளும், புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கையைப் பற்றிய புலம்பல்களாக இல்லாமல், புதிய வாழ்க்கை முறையை எப்படி வாழ வேண்டும் என்பதாக எடுத்துக்காட்டும் வழியில் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இந்நூல் புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றி அறிய முயலும் அனைவருக்குமான அருமையான நூல்.