கணினியில் ஏற்படும் சின்னச்சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம் கணினிப் பழுது நீக்குபவர்களைத் அடிக்கடித் தேட வேண்டியதாகி விடுகிறது. கணினி பழுது நீக்குபவர்கள் சிறிய வேலைகளென்று தெரிந்தால், உடனடியாக வந்து பழுது நீக்கித் தந்து விடுவதில்லை. கணினி வைத்திருப்பவர்கள் பலரும் சின்னச் சின்னப் பிரச்சனைகள் வராமலிருக்க என்ன செய்வது? என்று கணினி பழுது நீக்குபவர்களிடம் கேட்டால், கணினியை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்று ஒரே வரியில் சொல்லி விடுகின்றனர். ஆனால், கணினி பராமரிப்புக்கான வழிமுறைகளை யாருக்கும் சொல்லித் தருவதில்லை.
கணினி பராமரிப்பு குறித்து எதையாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்று பலரும் நினைத்துக் கொண்டிக்கும் வேளையில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வழங்கும் சிறந்த நூலாசிரியருக்கான பரிசினை ‘கணினியியல்’ பிரிவில் இரண்டு முறை பெற்றிருக்கும் ஜெ. வீரநாதன் ‘கணினி பராமரிப்பு’ எனும் பெயரிலான நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
கோயம்புத்தூரில் பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் எனும் பெயரிலான பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர், தமிழகம் மட்டுமின்றி. பிற மாநிலங்களுக்கும் சென்று, அச்சுத் தொழில் தொடர்பான பல்வேறு கணினிப் பயிற்சிகளை அளித்து வருபவர். பல்வேறு இடங்களுக்குப் பயிற்சியளிக்கச் செல்லும் இவருக்குக் கணினி பயன்படுத்தும் பலரிடம் ‘கணினி பராமரிப்பு’ குறித்த விழிப்புணர்வு இல்லாமை தெரிந்திருக்கும் போல் தெரிகிறது. கணினி பராமரிப்பு குறித்த சிறப்பான நூல் ஒன்றினை எழுதி வெளியிட்டு விட்டார்.
கணினி பராமரிப்புக்கு அவசியத் தேவைகளான தகவல்களை உள்ளடக்கிய,
1. அறிந்திருக்க வேண்டிய கணினியின் அடிப்படைகள்
2. கணினி பராமரிப்பு - வன்பொருள்
3. கணினி மென்பொருள் - அறிந்திருக்க வேண்டியவை
4. கணினி பராமரிப்பு - மென்பொருள்
5. இணையம் தொடர்பான பராமரிப்பு
6. மடிக்கணினி பராமரிப்பு
7. குறுவட்டுக்களைப் பராமரிப்பது
8. எளிதாகக் காப்பு நிரல் எடுக்க
9. கணினியில் ஏற்படக்கூடிய தொல்லைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
10. பராமரிப்பிற்கான அட்டவணை
எனும் பத்து தலைப்புகளில் அனைவரும் எளிமையாகக் கணினி பராமரிப்பினை அறிந்து கொள்ளும் வகையில் தேவையான படங்கள் மற்றும் விளக்கத்துடன் சிறந்த நூலை உருவாக்கித் தந்திருக்கிறார்.
கணினி வைத்திருக்கும் அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் இந்நூலினை வாங்கி வைத்துக் கொண்டால், கணினி பராமரிப்பு குறித்த வழிமுறைகளைத் தெரிந்து கொள்வதுடன், கணினியில் பழுது வராமல் காக்கும் கலையையும் சேர்த்துக் கற்றுக் கொள்ள முடியும்.