"இது உங்களுக்கானதா பாருங்கள்” என்ற தலைப்பில் வெளியான இந்த நூலைப் படித்ததும் “ஆம்! இது எங்களுக்கானதே” என்று இளைஞர்களைச் சொல்ல வைக்கும் பல செய்திகளை உள்ளடக்கமாகக் கொண்டு இந்நூல் அமைந்திருக்கிறது.
இளைய தலைமுறையினரின் நீண்ட நெடிய பார்வையில் அவர்களுக்கான வேலைவாய்ப்பு எட்டாக்கனியாகவே இருக்கிறது. தாங்கள் படித்த படிப்புக்கேற்ற வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினர் தங்களைச் சுற்றிலும் குவிந்து கிடக்கும் பல நல்ல வேலைவாய்ப்புகளைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
இது போன்ற அறியாமையில் இருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டும் வகையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் டிசைன்ஸ், பக்க வடிவமைப்பாளர், பிழை திருத்துநர், போட்டாசாப். இண்டிசைன் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அச்சுத் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள், சுற்றுலா மற்றும் விளம்பரத்துறைப் பணிகள் போன்றவைகளில் இருக்கும் பல்வேறு வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள், அதற்கான படிப்புகள் எங்கு இருக்கின்றன? எப்படிப் படிக்கலாம்? அதற்கான தகுதிகள் என்ன? வெளிநாடுகளில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வழிமுறைகள் போன்றவை இந்நூலில் விளக்கமாகத் தரப்பட்டிருக்கின்றன.
தங்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு போன்றவைகளை முன்பே திட்டமிட்டுச் செம்மையாக அமைத்துக் கொள்ள மிகச்சிறந்த வழிகாட்டும் நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது.
இந்தச் சிறிய நூலில் அரிய தகவல்களுடனான கட்டுரைகளை எளிய நடையில் அனைவரும் படிக்கும் வழியில் மிகச் சிறப்பாகக் கொடுத்திருப்பது நூலாசிரியரின் தனிச்சிறப்பாகவே கருதுகிறேன்.
இக்கட்டுரைகள் அனைத்தும் தினமணி - இளைஞர் மணி சிறப்பிதழ்களில் வெளியானவை என்பது இந்நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
இந்நூலை முழுமையாகப் படித்து முடித்ததும்,
“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு”
என்ற குறள் நம் நினைவுக்கு வந்து போகிறது.