பொருட்களையும், சேவைகளையும் விலைகொடுத்துப் பெற்றுப் பயன்படுத்தும் ‘நுகர்வோர்’ நலனைக் காக்கும் விதத்தில் பல நாடுகள் நுகர்வோர் பாதுகப்புச் சட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும், நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்குடன் “இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 1986” கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நுகர்வோருக்கான உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு, நுகர்வில் ஏற்படும் குறைபாடுகள், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் போன்றவைகளால் பாதிக்கப்படும் நுகர்வோர் அதற்கான இழப்பீடுகளைப் பெற இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 1986 உதவுகிறது.
தாங்கள் விலை கொடுத்துப் பெற்ற பொருளில் / சேவையில் குறைபாடுகள் எதுவாயினும், அதனைத் தங்கள் விதி என்று நொந்து கொள்கிறார்களே தவிர, அதிலுள்ள சதிகளை எதிர்த்துப் போராடத் தயாராக இல்லை. அதற்கு இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தைப் பற்றிய அறியாமையே முதன்மைக் காரணமாக இருக்கிறது.
இந்நிலையில், நுகர்வோர்களின் அறியாமையைப் போக்கி, அவர்களுக்கான உரிமைகளைத் தெரிந்து கொள்ளவும், நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் கொண்டு செல்லவும் விரும்பிய போடிநாயக்கனூர் ஜமீந்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராகவும், பள்ளியின் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றிய என். முத்து விஜயன் அவர்கள் ‘இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 1986” எனும் பெயரில் நுகர்வோர் பாதுகாப்புக்கான நூலினை எழுதி இருக்கிறார்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் மற்றும் அதன் பயன்பாடுகள், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், இன்றியமையாப் பொருட்களின் சட்டம் - 1955 போன்றவைகளை முழுமையாகச் சொல்லியிருப்பதுடன், நுகர்வோர் குறைபாடுகள் குறித்து மாவட்டங்களிலுள்ள நீதிமன்றங்களில் எப்படி முறையீடு செய்வது? அதற்கான இழப்பீட்டை எப்படிப் பெறுவது? என்பது போன்ற பல்வேறு தகவல்களையும் இந்நூலில் அழகாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
நுகர்வோர் குறைபாடு குறித்து யாருக்குப் புகார் அளிப்பது? எந்த முகவரிகளுக்குப் புகார்களை அனுப்புவது போன்ற தகவல்களுடன், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளின் முகவரிகளையும் இந்நூலில் தொகுத்தளித்திருக்கிறார்.
இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு சோதனைக் கூடங்கள், உணவுப்பொருட்களில் கலப்படம் செய்யப்படும் பொருட்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவைகளும் தனியாகத் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. மேலும், நுகர்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து, அதற்காகப் பெற்ற இழப்பீட்டுத் தொகை குறித்த பல்வேறு செய்திகளின் தொகுப்பும் கடைசிப்பக்கங்களில் இடம் பெற்றிருப்பது நுகர்வோர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
நுகர்வோர் பாதுகாப்பு குறித்த பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள உதவும் வகையில் அருமையான நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது.