திருநெல்வேலியைச் சேர்ந்த ‘நெருப்புவிழிகள்’ ம. சக்திவேலாயுதம் எழுதிய “நீங்களும் கிடைப்பீர்கள்” எனும் கவிதைத் தொகுப்பில் 119 சிறுகவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
பெரிய விடயத்தைத் தன் சிறு கவிதைகளில் எளிமையாகச் சொல்ல இந்த இளம் கவிஞர் முயற்சித்திருப்பது தெரிகிறது.
அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை கவிஞர்கள் தங்கள் கவிதையைத் தொடங்கும் முன்பு முதலில் ‘கடவுள் வாழ்த்து’ பாடி வைப்பார்கள். இக்கவிஞர்;
“நல்லதைச் செய்ய
நேரம் பார்க்காதீர்கள்...
நீங்கள் செய்யத் தொடங்கியதிலிருந்தே
உங்களுக்கான
நல்ல நேரம் ஆரம்பித்து விட்டது”
என்று ‘பகுத்தறிவு’ கவிதை ஒன்றை முன் வைத்துத் தொடங்கியது சிறப்பாக இருக்கிறது.
இக்கவிதை நூலில் பல கவிதைகள் சிறப்பாக இருக்கிறது. அவற்றுள்;
“வெளியே மழை
உள்ளே கன மழை
அரசுப் பேருந்து”
என்று இன்றைய அரசுப் பேருந்துகளின் அவலத்தைச் சாடும் கவிதை,
“ஏதேனும் நாம் வேண்டி நிற்கும் போதே
நமக்கு வேண்டியவர்களும்
வேண்டாதவர்களாகி விடுகிறார்கள்”
என்று மனிதர்களின் மனங்களைச் சுட்டிக் காட்டும் கவிதை,
“சலித்துக் கொள்பவனால்
சாதிக்க முடியாது...
சகித்துக் கொள்பவனால் மட்டுமே
சாதிக்க முடியும்...”
என்று அறிவுறுத்தும் கவிதை,
“தன் வாழ்க்கை
விலைபோகிறதே என்று
யாரும் வருத்தம் கொள்வதில்லை...
தான் நல்ல விலைக்கு
விலை போகவில்லையே என்றுதான்
வருந்துகிறார்கள்”
என்று இளம் உள்ளங்களின் நிலையைத் தெரிவிக்கும் கவிதை,
“பிரச்சனைகள் இல்லாத
மனிதர்களே இல்லை...
பிரச்சனை இல்லாதவர்கள்
மனிதர்களே இல்லை!”
என்று நம்பிக்கையூட்டும் கவிதை,
“தேவைகளை
குறைத்துக் கொள்வது மட்டுமல்ல...
தேவையற்றதை
நீக்கிக் கொள்வதுமே எளிமை”
என்று நல்வழி காட்டும் கவிதை,
“நில்...கவனி...செல்...
சாலைகளில் மட்டுமல்ல...
வாழ்க்கையிலும்!”
என்று வாழ்க்கையைக் கவனிக்க வைக்கும் கவிதை போன்றவை எனக்குப் பிடித்த கவிதைகளாக இருக்கின்றன.
புதிய கவிஞரின் புதுமைக் கவிதைகள் பாராட்டுக்குரியவை! மேலும் பல கவிதை நூல்களைப் படைக்க பெரு முயற்சிகள் தேவை!!