‘தூரிகைப் பூக்கள்’ எனும் கவிதை நூலினைப் படித்து முடித்தேன் என்பதை விட அப்பூக்களில் இருந்த கவிதைத் தேனைச் சுவைத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
கவிஞர் அர. விவேகானந்தன் அவர்களுக்குக் கவிதை ‘கை’ வந்த கலையாய் இருப்பதால், இந்நூலிலுள்ள ‘பா’க்கள் அனைத்தும் படிப்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில் அருமையாக அமைந்திருக்கின்றன.
‘தமிழ் வாழ்த்து’ தொடங்கி ‘முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர்’ வரையிலான ஐம்பத்தாறு கவிதைகளுமே தேன்குடத்தில் ஊறியப் பலாச்சுளைகளாய்த் தெவிட்டாத சொல்லினிமையினையும், தொடர்ந்து படிக்கத் தூண்டும் பொருளினிமையினையும் தருகின்றன.
மரபு வழியில் இலக்கண ஞானத்துடன் இயல்பாய், எளிமையாய், அருமையாய் ‘பா’ வடித்துள்ள பாங்கு இந்நூலாசிரியரின் தனித்திறனாகவேத் தெரிகிறது.
மரங்களின் அருமை, பெருமைகளையும், அதன் அவசியத்தையும் அழகாய்ப் புரிய வைக்கும் குறள் வெண்பா பத்தும் அழகு.
எண் சீர் விருத்தத்தில் அமைந்த ‘பா’ வில் வரும்;
“இடித்துரைத்தும் நல்வழியில் இயங்கா நாட்டில்
இனிய வழி சொல்லவந்தேன் ஏற்றல் வேண்டும்”
என்கிற வரிகள்... பஞ்சமா பாதகங்களில் முதல் பாதகமான மதுக்கேட்டிற்குக் காரணமான நாட்டின் மீது கோபமும், அந்தத் தீயச்செயலால் அழியும் சாமானிய மக்கள் மீது அக்கறையும் உள்ள கவிஞரின் இயல்பான உள்ளத்தை எடுத்துக் காட்டுகிறது.
இதே போல், இந்நூலில் பெண்கள் பற்றிய கவிதைகளுக்கும் தகுந்த இட ஒதுக்கீடு அளித்திருப்பது கவிஞரின் பெருந்தன்மைக்குச் சான்றாக இருக்கிறது.
‘பேசி (கைபேசி) விடு தூது’ கவிதை ‘தூது’ எனும் சிற்றிலக்கியக் குடும்பத்திற்குப் புதிய வரவாய் வந்திருக்கிறது.
இந்நூலில் மொழிப்பற்று, இயற்கை ரசிப்பு, சமூக அக்கறை போன்ற கவிதைகளுடன் ‘காதல்’ கவிதைகளும் கரும்பாய் இனிக்கின்றன.
மொத்தத்தில், ‘தூரிகைப்பூக்கள்’ கருத்து மணம் பரப்பும் ‘தூய பூக்கள்’ என்று பாராட்டும்படி மலர்ந்திருக்கின்றன.