டாக்டர் தி. கல்பனாதேவி எழுதிய ‘சாதக அலங்காரத்தில் சித்தர் கருத்துகள்’ எனும் இந்நூலில்;
1. அறிமுக இயல்
2. சாதக அலங்காரத்தில் சித்தர்களின் சமயம்
3. சாதக அலங்காரத்தில் சித்தர்களின் சித்தமருத்துவக் கருத்துகள்
4. சாதக அலங்காரத்தில் சித்தர்களின் ஜோதிடக் கருத்துகள்
என்று நான்கு இயல்கள் அமைந்திருக்கின்றன.
இதில் இடம் பெற்றுள்ள சாற்றுக்கவி, அணிந்துரைகள் உட்பட நூலில் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்துமே மிகவும் நயமாக உள்ளன.
தம் பட்டறிவுகளை நாட்டுப்புற வடிவங்களிலேயே எளிய சொற்களில் பாடிய ஞானிகள் சித்தர்கள். அவர்கள் யோக நூல், உடற்கூறு நூல், மருத்துவ நூல், சோதிட நூல், கணித நூல் என்று பல்வகையிலான துறைகளில் வல்லுநர்களாக விளங்கியவர்கள்.
அவர்கள் மொத்தம் எத்தனை பேர்? அவர்களின் பெயர்களெல்லாம் என்ன? அவர்களது பெயர்களுக்கான காரணங்கள் என்ன? என்பது போன்ற புள்ளிவிவரங்களுடனான தகவல்கள் இந்நூலில் தரப்பட்டிருப்பது படிப்பதற்கு இனிமையாக இருக்கிறது. குறிப்பாக, புஜண்டர், புலிப்பாணி, பாம்பாட்டி போன்ற சித்தர்களின் பெயர்க்காரணங்கள் மிகவும் இனிமையாகவும், ஆச்சரியமடையச் செய்வதாகவும் இருக்கிறது.
தொண்டு செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மேன்மை மிகுந்த சித்தர்கள் பற்றிப் பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லாத அரிய கருத்துகளை இந்நூல் மூலம் எடுத்துச் சொல்லியிருக்கும் நூலாசிரியரின் தொண்டும் போற்றுதலுக்குரியதுதான்.
போகர் எழுதிய நூல் உட்பட பல சித்தர்கள் பாடிய நூல்களைத் ‘தீட்சை சட்டைமுனி’ என்ற சித்தர் கிழித்தெறிந்தார் என்றும், அவற்றுள் உரோமர் என்ற சித்தர் எழுதிய நூலை மட்டும் தன் சட்டைக்குள் செருகி வைத்துப் பாதுகாத்தார் என்பது போன்ற தகவல்கள் சித்தர்கள் சித்து வேலைகள் மட்டுமின்றி, சிறப்பான செயல்களையும் செய்யக் கூடியவர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
மேலும், ஓங்காரம், பஞ்சாட்சரம், உயிர்களின் பிறப்புகள், கல்ப மருந்துகள் போன்ற தகவல்களையும் கொண்டு விரிவாக எழுதப்பட்டிருக்கும் இந்நூல் சித்தர்கள்கள் பற்றிய ஆர்வலர்கள், சித்தர் நெறியைப் பின்பற்றுபவர்கள், சித்தர் குறித்த ஆய்வுப்பணிகளைச் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் அறுசுவை படைக்கும் சிறந்த நூல் என்பதில் ஐயமில்லை.