தபால் நிலையம்
மு. சு. முத்துக்கமலம்
முன்னுரை
இந்தியாவில்150 வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் தபால் துறையின் கீழான தபால் நிலையங்கள் குறித்தும், அதன் பல்வேறு சேவைகள் குறித்தும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.
தபால் சேவை
தபால் நிலையங்கள் இந்தியாவில் வழியாக அனைத்துப் பகுதிகளுக்கும், குறைந்த செலவிலான தகவல் தொடர்புக்கு உதவும் அஞ்சல் அட்டை, மூடிய நிலையிலான தகவல் தொடர்புக்கு உதவும் உள்நாட்டுக் கடிதம், மூடிய உறையுடன் அனுப்பப்படும் தபால், குறிப்பிட்ட நபரிடம் மட்டும் நேரடியாகச் சேர்க்கக் கூடிய பதிவுத் தபால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைந்து சேர்க்கக் கூடிய விரைவுத் தபால், நூல் மற்றும் புத்தகங்களை அனுப்புவதற்கான நூல் தபால், குறிப்பிட்ட பொருட்களைக் கட்டுகளாகக் கொண்டு சேர்க்கும் கட்டுத் தபால், பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்புக்கானப் பணத்தை பெற்றுக் கொண்டு சேர்க்கும் தபால், பொருளுக்கான பண மதிப்பைக் குறிப்பிட்டு அனுப்பும் காப்பீட்டுத் தபால் என்று பல தபால் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் நண்பர்கள் போன்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கும், பொருள் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் வெளிநாட்டுத் தபால் சேவைகளும் அளிக்கப்படுகிறது. தபால் நிலையங்கள் இந்தச் சேவைகளுக்கான கட்டணத்தை தபால் வில்லைகள் வழியாகப் பெற்றுக் கொண்டு செயல்படுத்தி வருகின்றன.
தற்போது புதிதாகக் கிடைத்திருக்கும் மின்னஞ்சல் வசதி மூலம் மின்னஞ்சல் வழியிலான தபால் சேவையும் பக்க அடிப்படையில் சேவைக் கட்டணம் பெற்றுக் கொண்டு செய்யப்பட்டு வருகிறது.
சேமிப்பு வசதி
தபால் நிலையங்களில் சிறியவர்கள் முதல் வயதான பெரியவர்கள் வரை தங்களது பணத்தைச் சேமித்துக் கொள்ள பல்வேறு வகையான சேமிப்பு கணக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட கால அளவில் மூப்படையும் சேமிப்புப் பத்திரங்கள், தபால்நிலைய ஆயுள் காப்பீடு போன்ற சேவைகளும் செய்யப்பட்டுள்ளன.
கட்டணம் செலுத்தல்
ஆதார் அடையாள அட்டை விண்ணப்பித்தல், ஆதார் அடையாள அட்டை புதுப்பித்தல், கடவுச்சீட்டு சேவை, அடையாள அட்டை வழங்கல் வசதிகள் தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை தவிர, மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் போன்ற அரசுக்குச் செலுத்த வேண்டிய சில கட்டணங்களையும் தபால் நிலையம் வழியாகச் செலுத்த முடிகிறது.
பொருட்கள் விற்பனை
குறிப்பிட்ட தபால் நிலையங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படும் குளிர்பதனப்பெட்டி, சூரிய ஒளி விளக்குகள், புத்தகங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தங்கத்தை எவ்வித ஏமாற்றமும் இல்லாமல், பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், தரமான நிலையில் தங்க நாணயங்களாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தபால் வில்லை சேகரிப்பு
பள்ளி மாணவர்களிடம் பணம் மட்டுமின்றி கலைப் பொருட்கள், வித்தியாசமான பொருட்கள் போன்றவைகளை மகிழ்ச்சிக்காகச் சேகரிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகத் தபால் வில்லைகள் சேகரித்து அதை நினைவுத் தொகுப்பாகத் தயாரித்து வைத்துக் கொள்ளும் வழக்கத்தையும் தபால் நிலையங்கள் செய்து வருகின்றன.
முடிவுரை
இந்தியாவின் நகரப் பகுதிகள் மட்டுமின்றி சிறிய கிராமப் பகுதிகளிலும் கூட தபால் நிலையங்கள் அமைக்கப்பட்டு தபால் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தபால் நிலையங்கள், வணிக நோக்கமின்றி, பொதுமக்கள் பயன்பாட்டையே முக்கிய நோக்கமாகக் கொண்டு பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றன. “தபால் நிலையத்தின் சேவை, நம் அனைவரின் தேவை” என்பதை உணர்ந்து நாம் அனைவரும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.