ஐவான்சிங் என்ற செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஆறு கிராமங்கள் சொந்தமாக இருந்தன.
அன்று, ஏகாதசி விரதம் அனுஷ்டித்திருந்த செல்வந்தர், குதிரை வண்டியில் வெளியே சென்று, வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் திடீரென, குதிரை வண்டியின் சக்கரம் ஒன்று உடைந்து விட்டது.
வண்டியைத் தானே ஓட்டிச் சென்றதால், உதவிக்கு ஆள் இல்லாமல் வண்டியை இழுத்தபடி, பக்கத்துக் கிராமத்தில் இருந்த கொல்லன் பட்டறைக்குச் சென்றார்.
அங்கே, பட்டறைக்காரர் மட்டுமே இருந்தார். பணியாளர்கள் யாருமில்லை. அதனால், ‘ஐயா… இன்று ஏகாதசி என்பதால், பட்டறையில் உள்ள தொழிலாளிகள், வேலைக்கு வரவில்லை. அதனால், துருத்தி போட ஆட்கள் இல்லை. நீங்க கொஞ்ச நேரம் துருத்தி போட்டால், உங்களது வண்டிச் சக்கரத்தை சரி செய்து கொடுத்துவிடுவேன்…’ என்றார் பட்டறைக்காரர்.
அதைக் கேட்டதும் செல்வந்தர் திகைத்தார். காரணம், அவர், அதுவரை உடல் உழைப்பு எதையும் செய்ததில்லை. வேறு வழியில்லாமல் சம்மதித்து, துருத்தி போட்டார்.
வியர்த்துக் கொட்டியது. அதை, மேலாடையால் துடைத்தபடி, வலது கை, இடது கை என, மாற்றி மாற்றி துருத்தி போட்டார். பழக்கம் இல்லாத வேலை என்பதால், செல்வந்தருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அத்துடன் அன்று ஏகாதசி விரதம் இருந்ததால், விரைவில் சோர்ந்து விட்டார். ஆனாலும், அவர் முகத்தில் ஒரு சந்தோஷம்.
சக்கரம் சரி செய்யப்பட்டு, வண்டியில் பூட்டப்பட்டது.
‘சமயத்தில் உதவி செய்தாய்; இதற்கு, நான், உனக்கு எவ்வளவு பணம் தர வேண்டும்?’ எனக் கேட்டார் செல்வந்தர்.
அதற்குப் பட்டறைக்காரர், ‘ஐயா… சாதாரணமாக இந்த வேலைக்கு, ஆறு வெள்ளிப் பணம் வாங்குவேன். ஆனால், நீங்களும் துருத்தி போட்டு வேலை செய்ததால், அஞ்சு வெள்ளிப் பணம் கொடுத்தால் போதும்…’ என்றார்.
செல்வந்தர், ஆறு தங்கக் காசுகளை எடுத்து நீட்டியதும், பட்டறைக்காரர் ஆச்சரியப்பட்டார்.
‘அப்பா… இது உனக்கான கூலியல்ல; இது நான் தரும் குருதட்சணை. உடல் உழைப்பில் எத்தனை சுகம் இருக்கிறதென்று உன்னால்தான், இப்போது தெரிந்து கொண்டேன். அதற்கான குருதட்சணை தான் இது…’ என்று, பட்டறைக்காரரின் கைகளில் காசுகளை வைத்தார்.