விவேகானந்தர் தனது மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது தனது மாணவர்களிடம், "அரை மணி நேரம் தியானம் செய்தால் அது ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமமானது." என்றார். மேலும் தியானத்தின் அவசியத்தையும் விளக்கிக் கொண்டிருந்தார்.
ஒரு மாணவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. "அய்யா, ஒரு சந்தேகம்" என்றான்.
"என்ன?" என்று விவேகானந்தர் கேட்க, அந்த மாணவன், "சுவாமி ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேர தியானத்திற்குச் சமமாகுமா?" என்று கேட்டான்.
உடனே, "ஒரு முட்டாள் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஒரு அறிவாளி தூங்க ஆரம்பித்தால் முட்டாளாகத்தான் மாறமுடியும்." என்று சொன்னார் விவேகானந்தர்.
எதிர்பாராத இந்தப் பதிலைக் கேட்ட அந்த மாணவன் வெட்கித் தலைகுனிந்தான்.
எந்தக் கேள்வியையும் கேட்பதற்கு முன்பு சிந்தித்துப் பார்த்துத்தான் கேட்க வேண்டும்.