சுவாமி விவேகானந்தரிடம் தனது நீண்ட நாளைய சந்தேகத்திற்குத் தீர்வு காணும் பொருட்டு வந்திருந்தான் அந்த இளைஞன்.
அவனது எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விவேகானந்தர், "என்னப்பா விஷயம்..?'' என்று கேட்டார்.
"சுவாமி! ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் கணவன், மனைவி இருவருக்குமேச் சம பங்கு இருக்கிறது. ஆனாலும், பெண்தான் சிறந்தவள் என்கிறார்கள், அவளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது ஏன்?'' என்று கேட்டான் அந்த இளைஞன்.
இவனிடம் உபதேசம் சொன்னால் எதுவும் தலையில் ஏறாது என்று எண்ணிய விவேகானந்தர், அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வருமாறு அவனிடம் கூறினார்.
அவனும் அதை எடுத்து வந்தான். எப்படியும் 2 கிலோ எடைக்கு மேல் இருக்கும் அந்தக் கல்.
"சுவாமி! இந்தக் கல்லை நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் அந்த இளைஞன்.
அதற்கு விவேகானந்தர், "அந்தக் கல்லை உன் மடியில் கட்டிக்கொண்டு 5 மணி நேரம் சும்மா இருந்து விட்டு வா. அது போதும்" என்றார்.
அந்த இளைஞனும் தனது மடியில், ஒரு தாய் வயிற்றில் குழந்தையை சுமப்பது போல் அந்தக் கல்லை கட்டிக்கொண்டான். சிறிது நேரம்தான் நின்றிருப்பான். அவனுக்கு என்னமோ போல் இருந்தது. உடனே அருகில் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். ஆனாலும் அவனால் அப்படியிருக்க முடியவில்லை.
2 மணி நேரம்தான் ஓடியிருந்தது. அவனுக்கு என்னவோ 2 நாளாக அவஸ்தை பட்டதுபோல் இருந்தது.
வேறு வழியின்றி விவேகானந்தரிடம் ஓடினான்.
"சுவாமி! இதற்குமேல் என்னால் கல்லைக் கட்டிக்கொண்டு இருக்க முடியாது...'' என்று சொல்லி மேல் முச்சு கீழ் முச்சு வாங்கினான்.
அப்போது விவேகானந்தர் சொன்னார்.
"உன்னால் 2 கிலோ எடை கொண்ட கல்லை 4 மணி நேரம் கூடச் சுமக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாய் பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாளே... அதற்காக அவள் உன்னைப் போல் அலுத்துக் கொள்ளவில்லையே... அதுதான் தாய். அதனால்தான் அவளை நாம் பாராட்டுகிறோம், போற்றுகிறோம்...'' என்று விளக்கம் கொடுத்தார் விவேகானந்தர்.