அமெரிக்கப் புரட்சி நடந்து கொண்டிருந்த சமயம்.
அமெரிக்கப்படை ஒன்று நகரத்தின் வழியேச் சென்று கொண்டிருந்தது. அவர்கள் செல்லும் வழியில் ஒரு பெரிய மரம் கீழே விழுந்திருந்தது.
அதை அகற்றப் படை வீரர்கள் முயன்று கொண்டிருந்தனர். ஆனால் படைத் தலைவர் வெறுமனே நின்று கொண்டு, அவர்களை இன்னும் கடுமையாக வேலை செய்யும்படி வலியுறுத்திக் கொண்டு இருந்தார். ஆனால் அவர்களால் அதை நகர்த்த முடியவில்லை...
அப்போது அந்த வழியாக வந்த வழிப்போக்கர் ஒருவர், தன் குதிரையிலிருந்து இறங்கி அங்கே நடப்பதைக் கவனித்தார்.
பின் படைத்தலைவரிடம் சென்று, “நீங்களும் அவர்களுக்கு உதவி செய்தால் அவர்கள் அதை நகர்த்தி விடுவார்களே... நீங்கள் ஏன் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை?”
படைத்தலைவர் சொன்னார், “அது என் வேலை அல்ல... நான் படைத் தலைவன். அதைச் செய்வது அவர்கள் கடமை... அவர்கள்தான் அதைச் செய்ய வேண்டும்...”
அதைக் கேட்டபின் சற்றும் தயங்காமல் அந்த வழிப்போக்கர், படை வீரர்களுக்கு உதவி செய்து மரத்தை நகர்த்தினார்.
அந்தக் கூடுதல் பலம் மரத்தை நகர்த்த உதவியது.
மரத்தை நகர்த்திய பின் வழிப்போக்கர் படைத்தலைவரிடம், “அடுத்த முறை ஏதேனும் பலமாக நகர்த்த உதவி தேவைப்பட்டால், முதன்மைப் படைத் தலைவரை அழையுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அவர்தான் முதன்மை படைத் தலைவராக அமெரிக்கப் புரட்சியில் செயல்பட்டு, பின் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன்.