ஒருநாள் டால்ஸ்டாய் தன் அறையில் எழுதிக் கொண்டிருந்த போது தன் மகள் அழும் சப்தம் கேட்டது. அவர் வெளியே வந்து தன் மகளைத் தூக்கிக் கொண்டார், அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டு, ஏன் அழுகிறாய்? எனக் கேட்டார்.
அவள் மேலும் அழுது கொண்டே சொன்னாள், அவளுடன் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பையனுடன் திடீரென சண்டை வந்து, அவன் அவளை அடித்து விட்டதாகக் கூறினாள்.
பின்னர் அவள் அப்பாவிடம், அந்தப் பையனை பதிலுக்கு அடிக்கும்படி சொன்னாள்.
அனைத்தையும் கேட்ட டால்ஸ்டாய் தன் மகளின் கோபத்தை சமாதானப்படுத்தினார்.
பின், அவளிடம் ஒரு டம்ளர் பாலைத் தந்து, அதை அந்தப் பையனிடம் கொடுக்கச் சொன்னார்.
“இப்படிச் சொல்கிறாரே” என அவள் குழம்பினாலும், தன் அப்பா சொன்னபடியேச் செய்தாள்.
அவள் பால் தந்ததைக் கண்ட அந்த பையன் மிகவும் ஆச்சரியமடைந்தான்.
மனம் மாறிய அந்தச் சிறுவன் சிறுமியைக் கண்டு புன்னகைத்து நன்றி கூறினான்.
அன்று முதல் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகினர்.
கோபத்தை விட மன்னிப்புதான் எப்போதும் நல்ல முடிவுகளைத் தருகின்றது. அடிப்படையில், நமக்கு எதிராக நடப்பவர்களிடம் பழிவாங்கும் உணர்வுடன் பகைமை பாராட்டுவதால், அவர்களுக்கும் நம் மீதான பகைமை உணர்வு அதிகமாகுமேத் தவிர, நம்முடனான பிரச்சினைகள் முடியப் போவதில்லை. ஆனால், நல்ல குணத்தை காண்பிப்பதால் அது அவர்களைக் கவர்ந்து அவர்கள் மாறுவதற்கு வழி வகுக்கும்.
எனவே, பெரிய மனதுடன் மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.