‘கனடா’ என்ற நாட்டில் எட்மெளண்டன் என்ற நகரத்தில் மேயராக ஐவேர்டெண்ட் என்பவர் இருந்தார். அவரது அலுவலகம் பல மாடிக் கட்டடத்தின் இரண்டாம் அடுக்கில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு நாள் அவர் அலுவலகம் செல்ல அங்கிருந்த லிப்டின் உள்ளே நுழைந்தார்.
அவரைப் பின்பற்றி வந்த ஒரு பெண், உள்ளே இருப்பவர் யார்? எவர்? என அறியாமல் ஏதோ சிந்தனையோடு “ஏழாவது மாடிக்கு” என்றாள் அதிகார தோரணையோடு.
மேயர் பதிலேதும் கூறாமல் ஏழாவது மாடிக்கு லிப்டை இயக்கினார்.
அங்கு அந்தப்பெண்ணை விட்டுவிட்டுத் திரும்புகையில் அங்கிருந்த சிலர் லிப்டின் உள்ளே வந்து “முதல் மாடிக்கு” என்றனர்.
முதல் மாடியில் அவர்களை இறக்கிவிட்டு இரண்டாவது மாடியிலிருக்கும் தன் அலுவலகம் வந்து வேலையைத் தொடங்கினார்.
இரண்டு மணி நேரம் சென்றிருக்கும். டெலிபோன் மணி ஒலிக்க எதிர்முனையிலிருந்து ஒரு பெண்ணின் குரல் “ஹலோ மேயர் அவர்களே நான் ஏழாவது மாடியில் அரை மணி நேரமாகக் காத்துக் கொண்டிருக்கிறேன். ‘லிப்ட் பாய்’ லிப்டை மேலே கொண்டு வரவில்லை. அவனைக் கொஞ்சம் எச்சரிக்கை செய்யுங்கள்” என்றது.
மேயர், “அப்படியே ஆகட்டும் அம்மணி” என்றவர், தம் அலுவல்களை அப்படியே நிறுத்திவிட்டு வெளிச்சென்று லிப்டை ஏழாவது மாடிக்கு இயக்கினார்.
மாடியில் காத்திருந்த பெண்மணி காலையில் லிப்டில் வந்த பெண்மணியே! மேயரைக் கண்டதும் அவள் கோபத்துடன் கூச்சலிட்டாள்.
“என்ன வேலை பார்க்கிறாய் நீ? பொறுப்பற்ற உன் போன்றவர்களால் எங்கள் நேரம் எல்லாம் வீணாகிறது. மேயரிடம் சொல்லவில்லையானால், நீ இன்னும் கூட வந்திருக்க மாட்டாயல்லவா?” எனப் பொரிந்து கொண்டிருக்கும் போதே லிப்ட் முதல் மாடியை எட்டியது.
வெளியே நின்ற ஓர் உயர் அதிகாரி ‘லிப்டை’ திறந்து மேயரைப் பார்த்து “ஹலோ” மேயர் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்?” என்றவாறு கைகுலுக்கினார்.
அவருக்குப் பின்னால் நின்ற அப்பெண் இதைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.
இவ்வளவு நேரம் தான் வசைபாடியது நகர மேயரைத்தான் என்பதறிந்து வெட்கத்தாலும் அவமானத்தாலும் கூனிக் குறுகிச் செய்வதறியாது நின்றாள்.
மேயர், அப்பெண்ணைப் பார்த்து மென்மையாக “அம்மா உங்களுக்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு மன்னிக்கவும். ‘லிப்ட் பாய்’ வழியில் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டான். அவனுக்கு உதவ உடனிருந்த அலுவலர்களும் சென்று விட்டனர். ஆதலால்தான் உடனே மாற்று ஏற்பாடு செய்ய இயலவில்லை. மீண்டும் இவ்வாறு தவறு ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கிறோம்!” எனக் கூறினார்.
அப்பெண்மணி கண்ணீரோடு வணங்கியவாறு “இப்படிப்பட்ட மனிதர்களால் தான் உலகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய உமது செயல்பற்றிக் கூற வார்த்தைகள் ஏதுமில்லை. தங்களிடம் மன்னிப்புக் கேட்கும் அருகதையும் எனக்கில்லை” எனக்கூறி வருந்தியபடி செல்லும் அப்பெண்ணை அன்பு ததும்பப் பார்த்தவாறு நின்றார் மேயர்.