சிவகங்கை ராணியார் வேலு நாச்சியார் ஏழை எளியவர்களுக்குக் கொடுப்பதற்காக சேலைகள், கம்பளங்கள், உணவு தானியங்கள், கால்நடைகள் போன்றவற்றை தலைமை அமைச்சர் மூலம் கொடுத்து அனுப்பினார்.
அவைகளைத் திருடிச் செல்லும் நோக்கத்துடன் திருடர்கள் சிலர் நடு இரவில் அங்கு நுழைந்தனர்.
அவர்கள் நுழைந்த போது, அங்கு தரையில் பழைய பாயை விரித்து, பழைய கம்பளத்தைப் போர்த்தியபடி இருவர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு அருகில் மண் குவளைகளும், மண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் பானையும் இருந்தன.
திருடர்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
ஒருவரை எழுப்பி, "அய்யா எழுந்திருங்கள். நாங்கள் ராணியார் மக்களுக்குக் கொடுத்து அனுப்பிய பொருட்களைத் திருடிச் செல்ல வந்தோம். இங்கு ஒரு பக்கம் அதிகமான கம்பளி விரிப்புகளும் உலோகப் பாத்திரங்களும் இருந்தும், நீங்கள் இந்தக் குளிரில் ஒரு கிழிந்த கம்பளியைப் போர்த்திக் கொண்டிருக்கிறீர்களே?" என்றனர்.
அவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்த அவர், " நண்பர்களே! இந்தக் கிழிசல் கம்பளி கூட கிடைக்காத ஏழை எளியவர்களுக்காக ராணியால் வழங்கப்பட்ட கம்பளிகள் இவை. அவர்கள்தான் இந்தக் கம்பளிக்கு உடைமையானவர்கள். இவைகளை நாங்கள் எடுத்துப் போர்த்திக் கொண்டால் உங்களைப் போல் நானும் ஒரு திருடன் என்றுதான் சொல்ல வேண்டும்." என்றார்.
இதைக் கேட்ட திருடர்கள் அவரிடம் மன்னிப்புக் கேட்டதுடன், "இனி நாங்கள் திருட மாட்டோம். திருந்தி உழைத்துச் சாப்பிடுவோம்" என்று கூறித் திரும்பிச் சென்றனர்.
கிழிந்த போர்வையைப் போர்த்திக் காவல் காத்து திருடர்களைத் திருத்தியவர் யார் தெரியுமா? மருது பாண்டியர்களில் ஒருவரான சின்ன மருதுதான் அவர்.
சின்ன மருதுவைப் போல் இன்று அரசுப் பணியிலிருப்பவர்கள் இருந்தால்... அரசுத் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகப் பயனளிக்கும்.