1970 ஆம் ஆண்டில் பளு தூக்கும் போட்டியில் 490 முதல் 499 பவுண்டுகள் அதிகபட்ச எடையாக இருந்தது. அப்போதையக் காலக்கட்டத்திலிருந்த ரசியாவைச் சேர்ந்த வாசிலி அலெக்செவ் எனும் பளு தூக்கும் வீரர் இருந்தார். அவரும் 499 பவுண்டுகள் எடையை விடக் கூடுதலாக ஒரு பவுண்டு எடையையாவது கூடுதலாகத் தூக்கிப் புதிய உலக சாதனை ஏற்படுத்தி விட வேண்டுமென்று பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவரால் 499 பவுண்டுகளைத் தாண்டித் தூக்கமுடியவில்லை.
அவருடைய பயிற்சியாளர்கள் கொடுத்த கூடுதல் பயிற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. ஆனால், வாசிலி அலெக்செவ்விடம், தன்னால் உலக சாதனையாக இருந்த 499 பவுண்டுகள் எடையைத் தாண்டித் தன்னால் ஒரு பவுண்டு கூடத் தூக்க முடியாது என்கிற மனநிலையே இருந்தது. அவருடையப் பயிற்சியாளர்களுக்கு அவரால், 499 பவுண்டுகளைத் தாண்டி ஒரு பவுண்டாவது கூடத் தூக்கமுடியும் என்ற எண்ணமிருந்தது.
பயிற்சியாளர்கள் அவருடைய எடைக்கம்பத்தில் கூடுதலாக, இரண்டு பவுண்டுகள் எடையை அவருக்குத் தெரியாமல் சேர்த்தனர். அவரிடம் 499 பவுண்டுகள் இருப்பதாகவேச் சொன்னார்கள். அவரும் ஒரு வாரத்திற்கும் மேலாக, 501 பவுண்டுகள் எடையைத் தூக்கி வந்தார். சில வாரங்கள் பயிற்சியில் அவர் 501 பவுண்டுகள் எடையைத் தூக்கி, நல்ல பயிற்சி பெற்றிருந்தார்.
ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்குச் சில நாட்கள் முன்னதாக, அவரிடம் பயிற்சியாளர்கள் உண்மையைச் சொன்னார்கள். அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வாசிலி அலெக்செவ் முந்தைய உலக சாதனையை முறியடித்துப் புதிய சாதனையை ஏற்படுத்தினார். அதன் பிறகு, அவர் பளு தூக்குதலில் 81 தேசியச் சாதனைகளையும், 80 உலகச் சாதனைகளையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதனின் மனம் முடியாது என்று நினைக்கும் நிலையில் அது முடியாமலேப் போய்விடுகிறது. மனம் சொல்வதையே உடலும் நினைக்கும். உண்மையில் எடை தூக்குவது உடல் பலத்தைப் பொறுத்தது. அங்கு மனத்திற்கு என்ன வேலை?
எந்நிலையிலும் மனதைத் தளர விடாமலிருந்தால், எவ்வளவு பெரிய செயலையும் செய்ய முடியும் என்பதை இதன் மூலம் உணரலாம்.