ஒரு அந்தணச் சிறுவன் புத்தரிடம் வந்தான். அப்போது ஒருவர் புத்தரின் திருவோட்டில் ஒரு லட்டை இட்டார்.
அதைப் பார்த்த அந்த அந்தணச் சிறுவன், “புத்த பிரானே! அந்த லட்டை எனக்குக் கொடுங்கள்” என்று கூவினான்.
கருணையே திரு உருவமான புத்த பிரான் அந்தச் சிறுவனுக்கு உடனடியாக லட்டைத் தருவதாகச் சொன்னார். ஒரு நிபந்தனையின் பேரில்!
அந்த நிபந்தனை என்ன?
புத்தர் கூறினார், “குழந்தாய்! ‘இந்த லட்டு எனக்கு வேண்டாம்’ என்று நீ சொன்னால் உனக்கு இந்த லட்டை நான் தந்து விடுகிறேன்”
உடனே அந்தப் பையன், “புத்தரே, எனக்கு அந்த லட்டு வேண்டாம்” என்றான்.
தான் வாக்களித்தபடியே புத்தர், உடனடியாக அந்த லட்டை அந்தப் பையன் கையில் கொடுத்தார்.
பல சீடர்களும், பொதுமக்களும் இந்த நிகழ்வைப் பார்த்த வண்ணம் இருந்தனர்.
புத்தரின் அணுக்கத் தொண்டரான அனதபிந்தரும் இதைப் பார்த்தார். அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது.
அன்று புத்தருக்கு பிச்சையாகக் கிடைத்தது அந்த ஒரு லட்டுதான். அதையும் அந்தப் பையன் கேட்டு வாங்கிக் கொண்டான்.
புத்தர் அன்று பட்டினி அல்லவா கிடப்பார்.
அனத்பிந்தர் அந்தப் பையனை நோக்கி, “ பையா! உனக்கு ஐநூறு பொன் நாணயங்களைத் தருகிறேன். அந்த லட்டை புத்தருக்குத் திருப்பித் தந்து விடு” என்றார்.
பையன் இணங்கினான். லட்டைப் புத்தரிடமே திருப்பித் தந்தான்.
அனைத்துச் சீடர்கள் மனதிலும் ஒரு கேள்வி ஓடியது.
ஏன் புத்த பிரான் அந்தப் பையனிடம், “எனக்கு இந்த லட்டு வேண்டாம்” என்று சொல்லச் சொன்னார்?
ஒருவர் புத்தரிடமே இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டார்.
உடனடியாகப் புத்தர் பதில் அளித்தார். அதில் தான் கர்ம பலன் விளக்கம் கிடைத்தது.
“சீடர்களே! இதோ இந்த அந்தணச் சிறுவன் எனக்கு இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று பல்லாயிரம் ஜென்மங்களாகத் தன் தேவைக்கு ஒரு அடிமையாக ஆகி விட்டான். ஆகவே தான் அவனிடம் ‘அந்த லட்டு எனக்கு வேண்டாம்’ என்று சொல்லச் சொன்னேன். அது அவனுக்கு அந்தப் பழக்கத்தை விட ஒரு வழி காட்டியாக அமையட்டும் என்றே அப்படிச் சொன்னேன். அவன் ஆசையை விடுத்து உயரிய நிலைக்கு உயர வேண்டும் அல்லவா, அதற்காக இதைச் செய்தேன்”
பையனைப் பார்த்தவுடன் அவனது கர்ம சரித்திரத்தை பல்லாயிரம் ஜென்மங்கள் ஊடுருவி புத்தர் கண்டார்.
அந்தப் பையனுக்கு தன் கர்மம் பற்றி ஒன்றும் தெரியாது; அதிலிருந்து தப்பிக்க வழியும் தெரியாது.
“வேண்டும், இன்னும் வேண்டும்” என்பதுதான் அவனுக்குத் தெரியும்.
எல்லையற்ற கருணை கொண்ட புத்தர், இதைக் கருணையினால் செய்தார். தண்டிப்பதற்காக அல்ல.
அவனது கர்மங்களின் சரித்திரத்தை நன்கு அறிந்த அவர் அதில் தலையிட்டு அவன் விடுதலை பெற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்தார்.
நமது அன்றாட வாழ்க்கையில் தீய பழக்கம் ஒன்றிற்கு அடிமையான ஒருவன் தன் மீட்சிக்கான எண்ணத்தைத் திருப்பித்திருப்பி எண்ணியவாறே இருந்தால் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியும். புத்தரின் இந்தச் செய்கை, ஒரு கர்ம பலனின் எல்லையற்ற தீமையிலிருந்து விடுபட வழி காட்டுகிறது. வாயிலிருந்து வெளிவரும் ஒரு சின்ன வார்த்தை கூட வாழ்க்கையையே மாற்றி விட முடியும் என்பதைப் புத்தர் எடுத்துக் காட்டுகிறார்.
இந்த நிகழ்வு நமக்கு ஒரு பெரும் உத்வேகத்தைத் தருகிறது. ஒரு சின்ன நல்ல செயல் அல்லது எண்ணம் கூட நம்மை மாபெரும் தீங்கிலிருந்து விடுவிக்க வழி வகுக்கும் என்பதை இது காட்டுகிறது.