பாரதியார் புதுச்சேரியில் இருந்த போது, மிகவும் வறுமையில் இருந்தார். அவரது வீட்டில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தது.
பாரதியாரின் மனைவி செல்லம்மாள் சமையலுக்கு இருந்த கொஞ்ச அரிசியை எடுத்து வைத்துவிட்டு, குளிக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தால், முறத்தில் இருந்த அரிசியில் கால்பங்கைக் காணவில்லை. அருகில் இருந்த பாரதி, அரிசியை அள்ளி முற்றத்தில் குருவிகளுக்குத் தூவிக்கொண்டு இருந்தார்.
அரிசியைக் கண்ட குருவிகள் கூட்டமாக வந்து கொத்தித் தின்கின்றன. அதனை அருகில் அமர்ந்து ரசித்துக் கொண்டு இருக்கிறார் பாரதி.
அருகில் செல்லமாள் மிகவும் கோபமாக நின்று கொண்டு இருந்தார். அவரைப் பார்த்துப் பாரதி பேசுகிறார், ''செல்லம்மா... நாம் கோபப்பட்டுக் கொள்கிறோம். முகத்தை திருப்பிக் கொள்கிறோம். ஆனால் இந்த சிட்டுக்குருவிகளைப் பார். எவ்வளவு இணக்கமாக இருக்கின்றன. அன்பாக இருக்கின்றன. கண்கள் திறந்திருந்தும் நாம் இந்த சிட்டுக் குருவிகளை ரசிக்கவில்லை என்றால் நாம்தான் மூடர்கள். இந்தப் பறவைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார்.
இருந்த அரிசியிலும் கொஞ்சம் வீணாய்ப் போய்விட்டதே என்று கோபப்பட்ட செல்லம்மாள், ''உங்களுக்குப் பொறுப்பு இல்லை. உண்மை நிலவரம் புரியவில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாத போது சிட்டுக்குருவி பாடம் முக்கியமா? ஆண்டவன் என்னை சோதிக்கிறான்'' என புலம்பித் தள்ளினார்.
செல்லம்மாளின் வார்த்தைகளை அரைகுறையாய்க் காதில் வாங்கிக் கொண்டே, தன்னுடைய இளையமகள் சகுந்தலா பாரதியை அழைக்கிறார், பாரதி.
அந்தக் கணத்திலேயே ஒரு பாடலை பாடுகிறார் பாரதி.
அந்தப் பாடல் இதுதான்:
“விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியினைப் போலே
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு…)
பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையில்லாதோர் கூடு கட்டிக் கொண்டு
முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு…)
முற்றத்திலேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு…)”
பசியும்,கோவமுமாக இருந்த ஒரு இடம் பாரதியின் ஒரு பாடலுக்கு பின் கொண்டாட்டக்களமாக மாறிவிடுகிறது.
இரவில் பாரதி, செல்லம்மாளிடம் சொல்கிறார், ''நீ கவலைப்பட வேண்டாம் செல்லம்மா. இந்த குருவிப் பாட்டையே நான் பத்திரிகைக்கு அனுப்புகிறேன். பணம் வரும்'' என்றார்.