ஒருமுறை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு முன்பு அமர்ந்திருந்த சிறுவர்களைப் பார்த்து, "நமக்கெல்லாம் சுடுகாடு எங்கே இருக்கிறது என்று தெரியுமா?" என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுவர்கள் ஒட்டு மொத்தமாக, "ஊரின் கடைசிப் பகுதியில் இருக்கிறது" என்று பதில் கூறினார்கள்.
உடனே, "ஆடு, மாடு, கோழிகளுக்கு எங்கே இருக்கிறது?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் வாரியார்.
அவரின் கேள்விக்குப் பதில் தெரியாமல் குழந்தைகள் விழித்தனர்.
அப்போது வாரியார் சிரித்துக் கொண்டே, "இதோ இங்கே இருக்கிறது..." என்று வயிற்றைத் தடவிக் காண்பித்தார்.
கூட்டத்தினர் பலமாகச் சிரித்தனர்.
அசைவம் கூடாது என்கிற கருத்துடன் அவர் இப்படிப் பேசியது அனைவரையும் சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தது.