கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வில்லுப்பாட்டுக் குழுவில் ஒரு பின்பாட்டுக்காரர் இருந்தார்.
ஒருமுறை காந்தி கதை வில்லுப்பாட்டு நடந்து கொண்டிருந்தது.
அப்போது தண்டி யாத்திரையில் காந்தியின் உப்பு சத்தியாகிரகம் பற்றிய பாட்டை பின்பாட்டுக்காரரைப் பாடச் சொல்ல, அவருக்கு இரண்டாவது வரி மறந்து போய், "உப்பை எடுத்தார்...உப்பை எடுத்தார்" என்று ஐந்தாறு முறை அதே வரியைப் பாடிக் கொண்டிருந்தார்.
மக்கள் திருதிருவென விழித்தனர்.
உடனே கலைவாணர், "எவ்வளவோ போராடி உப்பு சத்தியாகிரகம் நடத்திய காந்தி, அங்கு சென்று ஒரே ஒரு தடவை தான் உப்பை எடுத்திருப்பாரா? பல தடவை குனிந்து குனிந்து உப்பை எடுத்திருப்பார். அதனால்தான் நம் பாட்டுக்காரரும் தத்ரூபமாக "உப்பை எடுத்தார்" என பலமுறை பாடிக் காட்டினார்'' என்று போட்டார் ஒரு போடு.
பாடகரின் மறதியை தன் மதிநுட்பத்தால் மாற்றிய கலைவாணருக்கு கைத் தட்டல்கள் குவிந்தன.