நம்மீது குறை சொல்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். நம்மீது வேண்டுமென்றே குறை சொன்னால் எரிச்சலோடு கோபமும் சேர்ந்து வரும். சில வேளைகளில் மற்றவர்கள் வீண் வம்பு செய்து நம்மைச் சண்டைக்கு இழுப்பார்கள்.
இதனால் நிலை குலைந்து நிதானம் இழந்து செயல்படவும் வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான காலகட்டங்களில் பிரச்சினை கொடுப்பவரை விட்டு விலகி இருப்பது விவேகமான செயல் ஆகும்.
வீணாக வம்புக்கு வந்தாலும் அவர்களோடு சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது.
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த நேரம் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தர வில்லை. பல்வேறு விதத்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்கள்.
குமரி அனந்தன் சமாளித்துப் பார்த்தார். முடியவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்ட குமரிஅனந்தன், முடிவில் பெருந்தலைவர் காமராஜரிடம் சொன்னார்: மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்” என்பதைச்சொன்னால் காமராஜர் கண்டிப்பாக அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார் என எதிர்பார்த்தார் குமரிஅனந்தன்.
காமராஜர் நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப் போயேன் என்று சொன்னார். பெருந்தலைவரின் சீரிய வழிகாட்டல் கேட்ட குமரி அனந்தன் அமைதியாகி விட்டார்.
வீணாக வம்புச்சண்டைக்கு இழுப்பவர்களை விட்டு விலகி விடு என்பது கர்மவீர்ர் காமராஜரின் அன்புக் கட்டளை ஆகும்.