1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் லால்பகதூர் சாஸ்திரி லோக் சேவா மண்டலின் தலைவரானார். அதனால் அவர் மிகவும் கூச்சம் அடைந்தார்.
தன் பெயர் பத்திரிகைகளில் அச்சாவதையும், அதன் மூலம் மக்கள் தன்னைப் புகழ்வதையும், வரவேற்பதையும் அவர் விரும்பவில்லை.
ஒரு நாள் சாஸ்திரிஜியின் நண்பர்கள் அவரிடம், "தாங்கள் இந்த அளவுக்குப் பத்திரிகைகளில் தங்கள் பெயர் வரக்கூடாது என்று ஏன் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு சாஸ்திரி சிறிது யோசித்துவிட்டு பதில் கூறினார்:
"லாலா லஜபதிராய் 'லோக் சேவா மண்டல்' செயல்முறைக்கு விளக்கம் அளித்த போது என்னிடம், 'லால்பகதூர், தாஜ்மகாலில் இரண்டு வகையான கற்கள் இருக்கின்றன. ஒன்று, விலையுயர்ந்த சலவைக்கற்கள். இவற்றை உலகம் முழுவதும் காண்கிறது புகழ்கிறது. இரண்டாவது வகைக் கற்கள் தாஜ்மகாலின் அஸ்திவாரத்தில் உள்ளன. அவற்றின் வாழ்க்கையில் இருள் மட்டுமே இருக்கிறது. ஆனால் தாஜ்மகாலை நிலைபெறச் செய்வது அவைதான்' லாலாஜியின் அந்தச் சொற்கள் எப்போதும் என் நினைவில் இருக்கின்றன. நான் அஸ்திவாரக் கல்லாகவே இருக்க விரும்புகிறேன்"