ஒரு முறை கிருபானந்த வாரியார் ரெயிலில் பயணம் செய்த போது, ஒரு ரெயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் சில மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவன், "அதோ... ரெயிலில் கிருபானந்த வாரியார் சுவாமிகள் இருக்கிறார்" என்றான்.
மற்றொருவன், "அது அவராக இருக்காது" என்றான். "வாரியார் வருகிறார் என்றால் அவரை சுற்றிலும் நிறைய கூட்டம் இருக்கும். அவரை தனியாக இருக்க விட மாட்டார்கள்" என்று அதற்கான காரணத்தையும் அந்த மாணவன் சொன்னான்.
வாரியாரை முதலில் பார்த்த மாணவன் விடுவதாக இல்லை. ரெயிலில் இருப்பது வாரியார் தான் என்று அடித்துக் கூறினான். இரு மாணவர்களும் வாரியாரா? இல்லையா? என்று வாக்குவாதம் செய்து கொண்டிருக்க, மற்றொரு மாணவன், "இதை நாம் அவரிடமே நேரடியாக கேட்டு விடுவோமே" என்று ஐடியா கொடுத்தான்.
தகுதி உள்ள ஒருவரிடம் போய் இப்படி கேள்வி கேட்பது அநாகரீகம் என்று ஒட்டு மொத்தமாக அவர்கள் முடிவெடுத்த போது, ஒருவன் மட்டும் ஒரு நோட்டை கையில் எடுத்துக் கொண்டு வாரியாரை நோக்கிச் சென்றான். வாரியாரிடம் அதை நீட்டி, "ஆட்டோகிராப" என்றான் பணிவோடு.
புன்னகைத்த வாரியார், கிருபானந்தவாரி என்று எழுதி கொடுத்தார்.
தனக்கு ஆட்டோகிராப் போட்டது உண்மையான வாரியார் தான் என்பதை உணர்ந்த அந்த மாணவன் மகிழ்ச்சியோடு ஓடி வந்து மற்ற மாணவர்களிடம் விஷயத்தை கூறினான். எல்லோருமே மகிழ்ந்தனர்.