தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்காக வகுப்பில் தலைமை ஆசிரியர் வந்திருந்தார்.
அனைத்து மாணவர்களின் பெயர்களும் படிக்கப்பட்ட பிறகு, ஒரு சிறுவன் எழுந்து நின்று, “என் பெயர் படிக்கப்படவில்லையே?'' என்று கேட்டான்.
கட்டுப்பாட்டுக்குப் பெயர் போன அந்தத் தலைமை ஆசிரியர் சொன்னார், “நீ தோல்வியடைந்திருப்பாய்...''
அந்த ஆண்டு அந்த மாணவன் வெகு நாட்களாக மலேரியாக் காய்ச்சலில் படுத்திருந்துவிட்டான். ஆனால், அவனுக்குத் தன்னுடைய வெற்றியில் நம்பிக்கை இருந்ததால் உறுதியாகச் சொன்னான்.
“இல்லை, நான் தோல்வியடைந்திருக்க மாட்டேன்''
"நீ தோல்விதான்'' என்று உறுதியாகக் கூறினார் தலைமை ஆசிரியர்.
"இல்லை, அப்படி இருக்காது''
"அப்படித்தான். நீ உட்கார். இனி ஏதாவது பேசினாயோ, அபராதம் விதிப்பேன்''
"நான் வெற்றி பெற்றிருப்பேன். இதில் சந்தேகமேக் கிடையாது'' என்று சிறுவன் மீண்டும் கூறினான்.
“ஐந்து ரூபாய் அபராதம்''
“என்னவானாலும் சரி. நான் வெற்றி பெற்றவன்தான்''
“பத்து ரூபாய்''
சிறுவன் சொல்லச் சொல்ல, ஐந்து ஐந்து ரூபாயாக அபராதம் ஏறிக் கொண்டேப் போய் ஐம்பது ரூபாயை எட்டிவிட்டார் தலைமை ஆசிரியர்.
ஆசிரியரின் கட்டுப்பாட்டுணர்வுக்கும் மாணவனின் தன்னம்பிக்கைக்கும் கடும் போட்டி இருந்தது.
அப்போது பள்ளி எழுத்தர் ஓடோடி வந்து அந்தச் சிறுவனை நோக்கிச் சைகை செய்து ஒரு தகவலைச் சொன்னார்.
சிறுவன் அமர்ந்து கொண்டான். அப்புறம்தான் தெரிந்தது, முதல்தர மதிப்பெண்களுடன் அவன் தேர்வில் தேர்ச்சியடைந்திருந்தது.
அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில் நமது நாட்டின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள்.