ஈசுவர சந்திர வித்யாசாகர் தாராள மனப்பான்மை கொண்டவர் என்றாலும் அவர் எதையும் முழுமையாக அறிந்தேச் செயல்படுவார்.
நன்றியுணர்வு, நல்ல பண்புகள் இல்லாதவர்களுக்கு எளிதில் அவர் உதவி செய்ய மாட்டார்.
ஒரு முறை தமிழ்நாட்டு இளைஞன் ஒருவன், தன் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் கல்கத்தாவிற்குச் சென்றுவிட்டான்.
கையிலிருந்த பணம் செலவானதுதான் மிச்சம். அவனுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.
வித்யாசாகரை அணுகி உதவி கேட்கும்படி அந்த இளைஞனுக்கு அங்கிருந்தவர்கள் யோசனை சொன்னார்கள்.
அந்த இளைஞன் வித்யாசாகரிடம் சென்று தன் கஷ்டங்களைச் சொல்லி முறையிட்டான்.
"பெற்றோரிடம் சொல்லாமல் ஏன் ஓடி வந்தாய்?” என்று கேட்டார் வித்யாசாகர்.
"என் விருப்பம் படிக்க வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு வசதியில்லை. வேலைக்குப் போகச் சொன்னார்கள். உடனே ஓடி வந்துவிட்டேன்'' என்றான் இளைஞன்.
"பெற்றோர் மனம் நோகும்படி நடந்து கொண்ட உனக்குக் கஷ்டப்பட்டால்தான் புத்தி வரும். உனக்கு உதவி செய்ய முடியாது'' என்று மறுத்துக் கூறினார் வித்யாசாகர்.
அதைக் கேட்ட இளைஞன் திடுக்கிட்டான்.
"கருணைக்கடல், வள்ளல் எனப் போற்றப்படும் இவரே இப்படி சொல்கிறாரே!” என்று அவன் கண் கலங்கியபடி அங்கிருந்து வெளியேறினான்.
அவன் வாயிலைக் கடக்கும் போது வித்யாசாகரின் குரல் கேட்டது.
"தம்பி, நீ இருக்குமிடத்தைக் குறிப்பிட்டு நலமாக இருப்பதாக முதலில் உன் பெற்றோருக்குக் கடிதம் எழுது. மேற்படிப்பிற்கும் தக்க ஏற்பாடு நடப்பதாகவும் அவர்களுக்குத் தெரிவித்து விடு'' என்று வித்யாசாகர் கூறினார்.
மலைத்துப் போன இளைஞன் வித்யாசாகரின் கால்களில் விழுந்து நன்றியுடன் கண்ணீர் மல்கினான்.