இத்தாலி நாட்டில் தோன்றிய உலகப் புகழ் பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ.
அவர் ஒரு சமயம் வெண்சலவைக் கற்கள் வியாபாரம் செய்யும் கடைவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
அங்கு ஒரு கடையில் நீளமான பெரிய ஒரு சலவைக் கல் கிடந்தது. ஆனால், அந்தக் கல்லைச் சுற்றிலும் நிறைய அழுக்கு படிந்திருந்தது.
மைக்கேல் கல்லை உற்றுக் கவனித்தார்.
பிறகு அதன் கடைக்காரரிடம் அவர், “இந்தக் கல்லின் விலை என்ன?'' என்று கேட்டார்.
பல ஆண்டுகளாக விலைக்குப் போகாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு கல்லை, இப்போது ஒருவர் விலைக்குக் கேட்கிறார் என்பதில் கடைக்காரருக்கு மகிழ்ச்சி.
"நீங்கள் இதற்கு விலை என்று பணம் எதுவும் தர வேண்டாம். இந்தக் கல்லை முதலில் நீங்கள் இங்கிருந்து எடுத்துச் சென்றாலேப் போதும்!'' என்றார் கடைக்காரர்.
ஒரு வருடம் கழிந்தது.
ஒரு நாள் மைக்கேல் ஏஞ்சலோ கடைக்காரரைத் தமது வீட்டிற்கு அழைத்திருந்தார்.
அங்கே அவர் கடைக்காரருக்கு பால் வெண்ணிற அழகிய ஒரு சிலையைக் கட்டினார்.
அது என்ன சிலை தெரியுமா? சிலுவையிலிருந்து இயேசுவை இறக்கி அவரை அன்னை மேரி தமது மடியின் மீது அமர்த்தியிருக்கும் காட்சியைச் சித்தரிக்கும் அழகிய சிலைதான் அது.
அவர்கள் இருவரும் கற்சிலைகள் என்பது கூர்ந்து கவனித்தால்தான் புரிந்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு சிலை உயிரோட்டமாகவும், தத்ரூபமாகவும் அமைந்திருந்தது.
சிலையைப் பார்த்து பிரம்மித்து, வாயடைத்துப்போய் நின்ற கடைக்காரரைப் பார்த்து மைக்கேல் ஏஞ்சலோ கூறினார்.
"அன்றைய தினம் நீங்கள் என்னிடம் கொடுத்தீர்களே, அதேக் கல்தான் இது. அழுக்கு மண்டியிருந்த அந்தக்கல்லைப் பார்த்த போது இவர்கள் இருவரும் என்னிடம், 'நாங்கள் நீண்ட நாட்களாக இந்தக் கல்லுக்குள் அடைப்பட்டிருக்கிறோம், எங்களை நீங்கள் சற்றுக் கவனிக்கக் கூடாதா?' என்று என்னைக் கேட்பது போல் எனக்குத் தோன்றியது. நான் அவர்களைச் சுற்றியிருந்த வேண்டாத பகுதிகளை நீக்கினேன், இதோ அவர்கள்...'' என்றார்.
இங்கு சிற்பிதான் ஞானகுரு; மாசு படிந்த கல் மனிதன்; அழகிய உருவச்சிலை என்பது நமது ஆன்ம வெளிப்பாடு; மாசு என்பது அக்ஞானம் என்றும் புரிந்து கொள்ளலாம்.