பீகார் மாநிலம். அங்கு தவத்பூர் என்ற ஊரில் வயது முதிர்ந்த ஓர் அம்மையார் வாழ்ந்து வந்தார்.
சுமார் 90 வயதான அவரை உறவினர்கள் எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள்.
நோய்வாய்ப்பட்டு அவர் எழுந்து கொள்ளவும் முடியாமல் படுக்கையிலேயேக் கிடந்தார்.
அவர் விரைவில் இறந்து விடுவார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை.
அந்த அம்மையாரைப் பற்றிக் கேள்விப்பட்ட சுவாமி அகண்டானந்தர், அவரது வீட்டிற்குச் சென்றார்.
வீட்டிற்குள் நுழைய முடியாத அளவிற்கு அங்கு துர்நாற்றம் வீசியது. அகண்டானந்தர் இருவர் உதவியுடன் அந்த அறையைச் சுத்தம் செய்தார். அந்த அம்மையாருக்கு மருத்துவச் சிகிச்சை, உணவு போன்றவற்றை அளித்தார்.
சில நாட்களில் அந்த அம்மையார் நோய் நீங்கி நல்ல உடல் ஆரோக்கியம் பெற்றார்.
அகண்டானந்தரிடம் அந்த மூதாட்டி, "அப்பா, நீ யார் என்று எனக்குத் தெரியாது. எங்கிருந்தோ வந்து என்னைப் பிழைக்க வைத்திருக்கிறாய். போன ஜன்மத்தில் நீ எனக்கு மகனாக இருந்திருக்க வேண்டும்" என்று மனம் நெகிழ்ந்து கூறினார்.
அதற்கு அகண்டானந்தர் அன்புடன், "போன ஜன்மத்தில் ஏன் அம்மா, இந்த ஜன்மத்திலும் நான் உங்கள் மகன்தான், நீங்கள் எனக்குத் தாய்தான்'' என்றார்.