காந்திஜி இங்கிலாந்தில் இருந்த நேரம்.
அங்குள்ள இந்தியச் சங்கத்தினர் ஒருமுறை அவருக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்தனர்.
விருந்து மாலை 6 மணிக்கு நடக்க இருந்தது.
ஆனால் மணி 5.30 ஆகியும் காந்திஜி வரவில்லை. காந்திஜியின் நேரம் தவறாமை நாடறிந்த ஒன்று. எனவே அவர் வந்தவுடன் விருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதால் சங்கத்தலைவர் அனைத்து வேலைகளையும் சரிபார்க்க ஆரம்பித்தார்.
சமையற்கூடத்திற்கு வந்ததும் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார். காரணம் அங்கு காந்திஜி மற்றவர்களோடு தாமும் அங்கிருந்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.
சங்கத்தலைவர் ஓடிவந்து, “பாபுஜி! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்! விழாநாயகரான தாங்களே இவ்வேலைகளைச் செய்யலாமா?" என்று பதற்றத்துடன் கேட்டார்.
அதற்கு காந்திஜி அமைதியாக, “இது இங்கிலாந்து! நானோ சைவ உணவுக்காரன்! இங்கு சைவ உணவைப் பெரிய அளவில் தயாரிப்பது என்பது சுலபமல்ல. எனவேதான் 4 மணிக்கே வந்து இவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன். விழா 6 மணிக்குத்தானே!" என்று பதிலளித்தார்.
அங்கிருந்த சமையல்காரர்கள் காந்திஜியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்களேத் தவிர, சரியாகப் பார்த்ததில்லை. அதன் பிறகு, தங்களுடன் பணிபுரிந்து வருபவர் காந்தி மகான் என்பதை அறிந்து வியந்து நின்றார்கள்.