ஊக்கமூட்டிய விவேகானந்தர்
ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இமயமலையில் நீண்ட மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மலைச்சரிவில், மேற்கொண்டு ஏறமுடியாமல் களைத்துப் போய் அமர்ந்திருந்தான் இளைஞன் ஒருவன்.
அவனைப் பார்த்ததும் அங்கே சென்றார் விவேகானந்தர். "நான் மிகவும் சோர்ந்து போய் விட்டேன். இந்த பாதையை இனி எப்படி கடக்கப் போகிறேன்? இனிமேல் என்னால் நடக்க இயலாது. என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது" என்று அவரிடம் புலம்பினான் அந்த இளைஞன்.
அதற்கு விவேகானந்தர், "இளைஞனே! சற்று கீழே பார். காலுக்கு கீழே நீண்டு தெரிகின்ற அந்த பாதை முழுவதும் உன்னால் கடக்கப்பட்டதுதான். இன்னும் கொஞ்சம் நடந்தால் போதும். முன்னால் தெரிகின்ற பாதையும் விரைவில் உன் காலுக்கு கீழே வந்துவிடும்" என்றார்.
அவரது தெம்பூட்டுகின்ற இந்த வார்த்தைகளை கேட்டதும், சோர்ந்து போய் இருந்த இளைஞன் துள்ளியெழுந்தான். நடக்க ஆரம்பித்தான். மலையின் உச்சியை அடைந்தான்.
- நெல்லை விவேகநந்தா.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.