காந்தியடிகள் குழந்தையாக இருந்தபொழுது அவரை 'மோனியா' என்ற செல்லப் பெயரால் அழைப்பார்கள்.
ஓடிப்பிடித்து விளையாடுதல், மரத்தில் ஏறி விளையாடுதல் போன்று பல வகைகளில் அவர் விளையாடி மகிழ்வார்.
சில வேளைகளில் அவருடைய சகோதரர்களுள் யாராவது ஒருவர், அவரை மரத்திலிருந்து கீழேப் பிடித்துத் தள்ளி விடுவார்கள்; அல்லது அவரை அடித்து விடுவார்கள்.
அப்பொழுதெல்லாம் அவருக்கு மிகவும் வலியும் வருத்தமும் ஏற்படும். இருப்பினும், அவர் அப்படியே அவற்றைப் பொறுத்துக் கொள்வார்.
தம்மைத் தள்ளியவர்களைப் பதிலுக்கு அவர் அவர்களை மரத்திலிருந்து கீழே பிடித்துத் தள்ள மாட்டார்; பதிலுக்கு அவர்களைத் திருப்பி அடிக்க மாட்டார்.
அதற்குப் பதிலாக நேரே தம் அன்னையிடம் சென்று நடந்ததைக் கூறி முறையிடுவார்.
அப்பொழுதெல்லாம் அவருடைய அன்னையார் அவரிடம், “நீயும் ஏன் உன் அண்ணனை அவ்வாறு செய்யக்கூடாது? நீ ஏன் உன் அண்ணனைத் திருப்பி அடிக்கக் கூடாது?'' என்று கேட்பார்.
அதற்குக் காந்தியடிகள், ''பிறரை அடிக்கும்படி நீங்களே எனக்குச் சொல்லித் தரலாமா? என் அண்ணனை நான் ஏன் அடிக்கவேண்டும்?'' என்று தம் அன்னை சொன்னதை மறுத்து அவரையேக் கேள்வி கேட்பார்.
அவருடைய அன்னையார், ''நீங்கள் சகோதரர்கள். உங்களுக்குள் அடித்துக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை'' என்று தாம் சொன்னதற்குரிய நியாயத்தை விளக்கியுரைப்பார்.
அப்பொழுது காந்தியடிகள், “அண்ணன் மூத்தவர்; ஆகையால் அவர் என்னை அடிக்கலாம். ஆனால், நான் திருப்பி அடிக்கக்கூடாது. உன்னை உன் அண்ணன் அடித்தார் என்பதற்காக அவரை நீ திருப்பி அடிக்கக்கூடாதென்று நீங்கள் எனக்குச் சொல்வதற்குப் பதிலாக, நீங்களே அவரைத் திருப்பி அடிக்கும்படி சொல்கிறீர்களே! திருப்பி அடிக்கும்படி அடிபட்டவனிடம் கூறுவதற்குப் பதிலாக அடித்தவனிடம் நீ அடிக்கக் கூடாதென்று நீங்கள் சொல்லக் கூடாதா?'' என்று அதி அற்புதமாகக் கேட்பார்.
அதைக் கேட்டு அவருடைய அன்னையார் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைவார்.
இவ்வளவு கூர்மையான அறிவோடு வாதம் செய்வதற்குத் தம் மகனுக்கு எப்படித் தெரிந்தது என்றெண்ணி வியந்து போவார்.