ஜெர்மன் அரசு, பிரான்ஸ் நாட்டில், தான் கைப்பற்றிய கிராமங்களில் பிரெஞ்சு மொழிக்குப் பதிலாக ஜெர்மன் மொழியைக் கற்பிக்க ஆணையிட்டது. அந்தப் பகுதிப் பிரெஞ்சு மக்கள் மனதில் அதிக வேதனை ஏற்பட்டது. ஆயினும் கட்டளைக்குப் பணிவதைத் தவிர வேறு வழியில்லாமல் போயிற்று.
ஒரு முறை பள்ளியைப் பார்வையிட ஜெர்மன் அரசி வந்தார்.
ஒரு பிரெஞ்சு மாணவியின் படிப்புத் திறமையைக் கண்டு மகிழ்ந்தார்.
“பெண்ணே, உனக்கு என்ன பரிசு வேண்டும்? கேள்” என்றார்.
அந்தப் பெண் கேட்டாள்: ''அரசியாரே! நான் கேட்பதைத் தாங்கள் நிச்சயம் தருவீர்களா?''
பக்கத்து மாணவி அவளை விலாவில் இடித்துக் கூறினாள்: "பைத்தியமே! அரசியால் தர முடியாத பொருள் என்ன உள்ளது? அவர் நமது நாட்டின் அதிபதி. அவரிடம் செல்வத்திற்கு என்ன குறை? இப்படிக் கேட்டு அவரை அவமதிக்கிறாயே.''
அந்த மாணவி கூறினாள்: ''எங்களுடைய பள்ளிக்கூடத்தில் ஜெர்மன் மொழிக்குப் பதிலாக எங்களுடைய பிரெஞ்சு மொழி கற்பிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்''- இந்தக் கோரிக்கையைக் கேட்டதும் அரசி திக்பிரமை உற்றார்.
அவர் பேசாது இருப்பதைக் கண்டதும் மாணவி கேட்டாள்: ''அரசியாரே! தாங்கள் ஏன் பேச்சற்று இருக்கிறீர்கள்? என் வேண்டுகோளை நிறைவேற்ற இயலாதா?''
அரசி வகுப்பு முழுவதிலும் கண்களைச் சுழலவிட்டார். பின்பு அவளை நோக்கிக் கூறினார்: ''நீ உண்மையில் பைத்தியமேதான். தின்பண்டமோ, நல்ல ஆடையணிகளோ, படிப்புக்கு வேண்டிய பொருட்களோ கேட்டிருக்கலாமே?''
மாணவி கூறினாள்:
''அரசியாரே! அடிமைப்பட்ட உடலோ, ஆத்மாவோ அணிகலன்களால் எந்தவிதப் பெருமையும் அடையாது''
அதைக் கேட்டதும் அரசி அந்தப் பெண்ணின் தேசபக்தியைப் புகழ்ந்து பேசலானாள்: '
'மகளே! நீ பெரியதொரு பரிசைக் கேட்டிருக்கிறாய். உனக்கு நான் ஏமாற்றமளிக்க மாட்டேன். இந்தப் பள்ளியில் ஜெர்மனிக்குப் பதிலாகப் பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று ஆணையிடுகிறேன்'' என்றார்.