‘ஒரு பெரிய இயந்திரத் தொழிற்சாலையில் பணி புரிய ஆட்கள் தேவை' என பத்திரிகைகளில் விளம்பரம் வெளியாகி இருப்பதை ஹென்றி போர்டு கவனித்தார்.
அந்தத் தொழிற்சாலையின் நிர்வாகிகள் வேலைக்குச் சேருவதற்கான தகுதிகள் என்று இருபது அம்சத் தகுதிகளை நிர்ணயித்திருந்தனர்.
அந்த இருபது தகுதிகளில் ஒன்றுகூட தமக்கு இல்லை என்பதை உணர்ந்து அவர் மனம் வேதனைப்பட்டாலும், தன்னம்பிக்கையுடன் தொழிற்சாலையை நோக்கிப் புறப்பட்டார்.
தொழிற்சாலை நிர்வாகியை அவர் சந்தித்தபோது, ஹென்றிபோர்டின் தோற்றமும் உடைகளுமே நிர்வாகிக்குப் பிடிக்கவில்லை.
வேண்டா வெறுப்பாக அவருடைய தகுதிகளை விசாரித்தார்.
தங்கள் தொழிற்சாலைப் பணியாளருக்கு இருக்க வேண்டிய இருபது தகுதிகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லி, அந்தத் தகுதி அவருக்கு இருக்கிறதா? என்று நிர்வாகி விசாரித்த போது, ''இல்லை, இல்லை" என்ற பதில்களே போர்டிடமிருந்து கிடைத்தது.
''ஒரு தகுதியும் இல்லாத நீ என்ன நோக்கத்தில் நம்பிக்கையுடன் இங்கே வந்தாய்?'' என்று ஏளனமாகக் கேட்டார் நிர்வாகி.
''நீங்கள் வகுத்து வைத்திருக்கும் இருபது தகுதிகளிலேயே உலகம் அடங்கி விட்டதாக நான் கருதவில்லை. உங்கள் தகுதிப் பட்டியலில் இல்லாத சில தகுதிகள் எனக்கு இருக்கிறது என்று நான் நம்புகிறேன், அதனால் வந்தேன்'' என்றார் ஹென்றிபோர்டு.
நிர்வாகியின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.
''அப்படி என்ன சிறப்புத் தகுதி உன்னிடம் இருக்கிறது?'' என்று வியப்புடன் கேட்டார் நிர்வாகி.
''உங்கள் இருபது தகுதிகளில் ஒன்று கூட கடின உழைப்பைக் குறித்ததாக இல்லை. இருபது தகுதிகளும் பெற்ற ஒருவர், கடினமாக உழைக்கக் கூடியவராக இல்லாமலிருந்தால் அந்த இருபது தகுதிகளால் அவருக்கு என்ன பயன்? உங்கள் நிறுவனத்துக்கு என்ன பயன்?'' என்று கேட்டார் ஹென்றிபோர்டு.
இந்தப் பதில் நிர்வாகிக்கு பெரிய அதிர்ச்சியைத் தந்தது.
போர்டு கூறும் வாதம் உண்மைதானே.
இருபது தகுதிகளும் குறைவறப் பெற்ற ஒருவன் உழைப்பதற்கேற்ற உடல் வலிமையைப் பெறாதவனாக இருந்தால், உடல் வலிமை இருந்தும் உழைக்கப் பின்வாங்கும் சோம்பேறியாக இருந்தால் சரியாக வேலை நடக்குமா?
''நீ சொல்வதை விவாதத்திற்காக 'சரி' என்று ஒப்புக்கொண்டாலும், எங்கள் தொழிற்சாலையில் பணி புரிவதற்கான குறைந்தபட்ச தொழிலியல் அறிவும் அனு பவமும் உனக்குத் தேவையல்லவா!'' என்று கேட்டார் அந்த நிர்வாகி.
ஹென்றி போர்டு மிகவும் கனிவான குரலில், ''என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் உங்கள் தாய் வயிற்றிலிருந்து பிறக்கும் போதே, இந்தத் தொழிற்சாலையின் நிர்வாகிக்கான பயிற்சியைப் பெற்று வந்தீர்களா? இவ்விதம் கேட்பதற்காகக் கோபமடையமாட்டீர்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.
நிர்வாகி தன்னை மறந்து சிரித்தார். ஹென்றி போர்டின் சாதுரியமான பதில், அவருக்கு அவர் மீது ஒருவித நல்லெண்ணத்தைத் தோற்றுவித்தது.
ஹென்றிபோர்டுக்கு அவர் தமது தொழிற்சாலையின் அடித்தள வேலை என்று கருதப்பட்ட ஒரு சாமானிய வேலையைக் கொடுத்தார்.
அவ்வாறு ஒரு சாமானியத் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்த ஹென்றி போர்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தொழிற்சாலையின் தலைமைத் தொழில் நுணுக்கத் தலைவரானார். அடுத்தச் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தொழிற்சாலையையே அவர் விலைக்கு வாங்கிச் சொந்தமாக்கிக் கொண்டார்.
ஹென்றி போர்டுக்கு தொழில் செய்வதற்கான எந்தத் தகுதியும் இல்லை என்று தொழிற்சாலை நிர்வாகி கருதினார். ஹென்றிபோர்டோ தம்முடைய உழைக்கும் சக்தியையேப் பெரிய தகுதியாகக் கருதினார்.
அந்தத் தொழிற்சாலையில் இடம் பிடிக்க மட்டுமல்ல, வாழ்க்கையில் உயர்ந்து ஒரு கோடீசுவரர் ஆகவும் அவருடைய கடின உழைப்பு எனும் அந்தத் தகுதிதான் காரணமாக இருந்தது.
எனவே நாம் வாழ்க்கையில் உண்மையிலேயே உயர்வு பெற வேண்டுமானால் அதற்குத் தேவையானது ‘உழைப்பு’ மட்டுமே.