முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள சாயல்குடியில் சேதுராமன் செட்டியார் என்ற ஒரு பழம் பெரும் தேசபக்தர், சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசக சாலையை அமைத்துச் சிறப்பாக நடத்தி வந்தார்.
அந்த வாசகசாலையின் முதலாவது ஆண்டு விழா 1933 ஆம் ஆண்டு, மாவட்ட மாநாடு போல் பெரிய அளவில் அவ்வளவு சிறப்பாக நடைபெற்றது. அந்த ஆண்டு விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் சுவாமி விவேகானந்தர் படத்தைத் திறந்து வைத்துப் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை என்கிற தகவலும் வந்து சேர்ந்தது.
அவருக்குப் பதிலாக யாரை விவேகானந்தர் படத்தைத் திறந்து வைக்க ஏற்பாடு செய்வது? என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது, சாயல்குடிக்குப் பக்கமுள்ள கிராமத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வந்திருப்பது சேதுராமன் செட்டியாருக்குத் தெரிய வந்தது.
உடனே அவர், ''விழாவில் தாங்கள் தான் விவேகானந்தர் படத்தைத் திறந்து வைத்துப் பேச வேண்டும்'' என்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அழைத்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அப்போது 25 வயது.
உடனே தேவரும் ஒப்புக்கொண்டு அப்போதே புறப்பட்டுச் சாயல்குடிக்கு வந்துவிட்டார்.
ஆண்டு விழா தொடங்கியது.
தேவர், விவேகானந்தர் படத்தைத் திறந்து வைத்துப் பேச ஆரம்பித்தார். ஒரு பத்து நிமிடம், அல்லது பதினைந்து நிமிடம்தான் தேவர் பேசுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் எதிர்பார்த்ததற்கு மாறாக தேவர் மூன்று மணி நேரம் விவேகானந்தரைப் பற்றி பேசிய முதல் கன்னிப்பேச்சு அனைவரையும் அப்படியேத் திகைக்க வைத்தது.
அதற்கு முன்பு, பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் எந்த மேடையும் ஏறிப் பேசியதில்லை. விவேகானந்தர் பற்றி அவர் பேசிய பேச்சுதான் அவரது முதல் பேச்சு. முதல் பேச்சிலேயே அரசியலும் ஆன்மிகமும் கலந்து சுவாமி விவேகானந்தரின் தத்துவங்களை எடுத்து வைத்து, அவர் ஆற்றிய சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது.
விவேகானந்தர் வாசகசாலை ஆண்டு விழாவில் தான் காமராஜரும் தேவரை முதன்முதலாகப் பார்க்கிறார்.
காமராஜரும், ''இது போன்ற ஒரு சொற்பொழிவை நான் இதுவரையில் கேட்டதில்லை'' என்று புகழ்ந்து பாராட்டி, அவரது வீரமிக்கச் சொற்பொழிவு விடுதலைப் போருக்கு மிகவும் பயன்படும் என்று பெருமிதம் கொண்டார்.