கிராமப்புறங்களில் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை குலதெய்வக் கோவிலுக்கோ அல்லது வேறு ஏதேனும் கோவிலுக்கோ சென்று இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு விட்டுத் திரும்புவார்கள்.
வேதாத்திரி மகரிஷியின் பெற்றோரும் ஆண்டுதோறும் திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு செல்வார்கள். ஒருமுறை வேதாத்திரி மகரிஷியையும், அவரது தம்பியையும் அழைத்துக் கொண்டு திருப்போரூர் சென்றார்கள்.
அங்கு இரண்டு நாட்கள் இருந்துவிட்டு மாமல்லபுரம் சென்றார்கள். அவர்களது குடும்பத்தில் மாமிச உணவு உட்கொள்ளும் வழக்கம் இருந்தது. வேதாத்திரி மகரிஷிக்கு சிறு வயது முதலே மாமிச உணவு அவ்வளவாக பிடிக்காது என்றாலும், அதை அடியோடு நிறுத்தி விடவில்லை. எப்பொழுதாவது உண்பார்.
மாமல்லபுரத்திற்கு சென்ற வேதாத்திரி மகரிஷி, திருவிழாவையொட்டிப் போடப்பட்டிருந்த ஒரு புத்தகக் கடைக்கு சென்றார். ஒரு புத்தகம் அவரது கவனத்தை ஈர்த்தது. புலால் உணவின் கேடுகள் என்பதுதான் அந்த புத்தகத்தின் தலைப்பு. அந்தப் புத்தகத்தின் விலை ஒண்ணே காலணா. அதை வாங்கி படித்தார். அதில் இடம் பெற்றிருந்த சில கவிதைகள் அவரை வெகுவாக கவர்ந்தன.
ஒரு கவிதையில், மாபெரும் முனிவராக இருந்தாலும், ஒரு ஆடு அல்லது மாடு தன்னைப் பிறர் கொல்லும் போது வெளியிடும் அம்மா... என்னும் ஓசையை கேட்டு விட்டால், அதை, அந்த கொடுமையான துன்பத்தில் இருந்து விடுவிக்காமல், இருந்த இடத்தைவிட்டு அகன்று போனால் அவருக்கு நரகம்தான் கிட்டும். அப்படியென்றால், அந்தக் கொலைச் செயல் மூலம் கிடைத்த மாமிசத்தை உண்டவர்கள் எத்தகைய பாவத்திற்கு உள்ளாவார்கள்? என்று கூறப்பட்டு இருந்தது.
இதைப் படித்த உடனே வேதாத்திரி மகரிஷியின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன. அதன் பிறகு மாமிச உணவை அவர் தொட்டதே கிடையாது.
மாமிசம் உண்பதை ஏன் நிறுத்த வேண்டும்? என்பது பற்றி வேதாத்திரி மகரிஷி இப்படி கூறுகிறார்:
மனிதனைத் தவிர, மற்ற உயிரினங்கள் தங்களுக்கு வேண்டிய உணவைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய திறன் இல்லாததால் அவை எல்லாம் பிற உயிர்களைக் கொன்று, உடலை உண்டு வாழ்கின்றன. இதைக் குற்றம் என்று கூற முடியாது.
விதை விதைத்துத் தானே உணவை உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்ற ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு இன்னொரு உயிரை உணவாக உட்கொள்ள வேண்டிய பழக்கம் தேவையில்லை. அதனால், மனிதன் பிற உயிரை உணவுக்காக கொல்வது நீதி ஆகாது. உணவுக்காக உயிர்க்கொலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மாமிசமானது பிற உயிரினங்களைத் துன்புறுத்திக் கொடுமைப்படுத்தி பெறப்படுவதாகும். அது, நம் உடல் அணுக்களில் கலந்தால் நம் எண்ணத்திலும் வன்முறை வளர வாய்ப்பை ஏற்படுத்தாதா? உலக சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் புலால் உண்கின்ற சமுதாயங்களில் குற்றங்கள், போர்கள் அதிகமாக நிகழ்ந்தது தெரியவரும்.
தாவர ஆகாரத்தை சாப்பிடுவதால் குடலுக்கு வலிமை ஏற்படும். சுலபமாக உடலுடன் கலந்து சத்தாக மாறிவிடும். ஆனால், மாமிசம் உண்பதால் குடல் வலிமையும், ஜீரண பலமும் குறைந்து, உடல் உள் உறுப்புகள் சோம்பல் நிலையை அடைந்துவிடும்.
மாமிசம் உண்பவர்கள் ஒரே தாவலில் தாவர உணவுக்கு வந்துவிடத் தேவையில்லை. அப்படி முயன்றால், ரத்தத்தில் ரசாயன மாறுபாடு ஏற்பட்டு, நரம்புகளுக்குப் பலவீனம் உண்டாகி விடும். சிலருக்கு நோய்களும் ஏற்படலாம்.
நீங்கள் சைவத்துக்கு மாற விரும்பினால் படிப்படியாகவே அந்த மாறுதலை மேற்கொள்ள வேண்டும். உணவு மாற்றத்தை உடலும், மனமும் ஒத்துக்கொள்கின்ற வகையில் மாமிச உணவை சிறிது சிறிதாக குறைத்து, தாவர உணவு வகைகளை அதிகப்படுத்தி சில மாதங்கள் இவ்வாறு உட்கொண்டால் சாத்வீக உணவு முறையினை பழக்கமாக்கிக் கொள்ளலாம்.
குழந்தை முதலே தாவர உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் கஷ்டமே தோன்றாது. சிலர் பால் மட்டும் சாப்பிடலாமா? என்று கேட்கிறார்கள். அதை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாலைக் கறக்கும்போது பசுவிற்கு அது இன்பமாகவே இருக்கிறது. இன்னும் சிலர், முட்டையும் மாமிசம்தானே என்று சந்தேகம் எழுப்பலாம். முட்டையில் உறுப்புகள் பரிமாணம் அடையவில்லை. அதை உட்கொள்வதால் எந்தவிதமான துன்பமும் முட்டைக்கு ஏற்படாது. அதில் நிறைய சத்து உள்ளது. அதனால், முட்டையைச் சாப்பிடலாம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.