பல வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் வசித்து வந்த ஒரு பிஷப், மேற்குக் கடற்கரையோரம் இருந்த ஒரு சமயக் கல்லூரிக்குச் சென்றார். அக்கல்லூரியில் பௌதிகமும் ரசாயனமும் கற்றுத் தருகின்ற பேராசிரியரான ஓர் இளைஞனுடன் தமது அறையைப் பகிர்ந்து கொண்டார்.
அந்தப் பேராசிரியர் ஒரு நாள் தன் நண்பர்கள் அனைவரையும் பிஷப்பைச் சந்திக்க அழைத்து வந்தார்.
பிஷப் பேசும்போது, ‘‘இயற்கையில் கண்டுபிடிக்கப்பட வேண்டியவை அனைத்தையும் கண்டுபிடித்தாகிவிட்டது; இனிமேல் கண்டுபிடிக்கப்பட வேண்டியவை எதுவும் இல்லை’’ என்றார்.
அதற்குப் பேராசிரியர் உடன்படவில்லை. உலகம் கண்டுபிடிப்புகளின் வாயிற்படியில்தான் உள்ளது என்று கூறினார்.
பிஷப் அவரிடம், ‘‘அப்படியானால், அவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றிக் கூறுங்கள்’’ என்று சவால் விட்டார்.
பேராசிரியர், ‘‘இன்னும் 50 வருடங்களில் மனிதன் பறக்கக் கற்றுக்கொண்டு விடுவான் என நம்புகிறேன்’’ என்றார்.
இதைக் கேட்டு அந்த பிஷப் விழுந்து விழுந்து சிரித்து, ‘‘நண்பரே, பைத்தியம்போல் பேசாதீர்கள். கடவுள் மனிதன் பறக்க வேண்டும் என நினைத்திருந்தால், அவர் மனிதனுக்கு இறக்கைகளைக் கொடுத்திருப்பார். பறப்பது என்பது பறவைகளுக்கும் தேவதைகளுக்கும் மட்டும்தான்’’ என்றார்.
இதில் வேடிக்கை என்ன தெரியுமா?
அந்த பிஷப்பின் பெயர் ‘ரைட்’. அவருக்கு இரண்டு மகன்கள் ‘ஆர்வில், ‘வில்பர்’ என்பவர்கள். அவர்கள்தான் முதல் ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தவர்கள்!