ஒரு முறை கிரீடகிரி என்ற கிராமத்திற்கு ஸ்ரீராகவேந்திரர் சென்றிருந்தார்.
அங்குள்ள கிராமத் தலைவர் வீட்டில் பூஜைக்கும், அதைத்தொடர்ந்து பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்களுக்கு விருந்தும் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.
விருந்தில் பரிமாறுவதற்காக மாம்பழங்களைக் கொண்டு பிழிந்தெடுத்த மாம்பழச்சாறு ஒரு பெரிய அண்டா நிறைய தயார் செய்யப்பட்டிருந்தது.
விளையாடிக் கொண்டிருந்த அந்தக் கிராமத் தலைவரின் குழந்தை அந்தப் பெரிய அண்டாவைப் பார்த்ததும் அருகில் வந்தது. அந்த அண்டாவுக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக, இரு கைகளாலும் அண்டாவின் விளிம்பைப் பிடித்துக் கொண்டு தலையை நீட்டி, காலை சற்று மேலே எம்பி தூக்கி எட்டிப் பார்த்தது.
அப்போதுதான் விதி வேலை செய்தது. அண்டாவை எட்டிப் பார்த்த குழந்தை அதற்குள் எதிர்பாராதவிதமாக விழுந்து விட்டது. வெளியே வர முடியாததால் மாம்பழச்சாறுக்குள் தத்தளித்து மூழ்கிவிட்டது.
இந்த விபரீதம் தெரியாமல் பக்தர்கள் எல்லோரும் ஸ்ரீராகவேந்திரர் நடத்திக் கொண்டிருந்த மூலராமர் பூஜையில் பக்தி பரவசத்தோடு ஈடுபட்டிருந்தனர்.
குழந்தை மாம்பழச்சாறு இருந்த அண்டாவுக்குள் விழுந்து மூழ்கிய அதேநேரம், பூஜையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீராகவேந்திரர் மானசீகமாக அதை அறிந்து விட்டார். ஆம்! அவர் வைத்திருந்த கமண்டலத்தில் ஒரு வண்டு விழுந்து விட்டது. அதனால் பூஜைக்கு வேறு தீர்த்தம் கேட்டு வாங்கினார். அதேநேரம், ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது என்பதை உறுதி செய்து கொண்டார்.
பூஜை முடிந்ததும் பக்தர்கள் எல்லோருக்கும் பிரசாதம் வழங்க ஆயத்தமானார்கள். குழந்தையைக் காணாத கிராமத் தலைவரும், அவரது மனைவியும் அங்கும் இங்கும் அக்குழந்தையை தேடினார்கள். அண்டாவுக்குள் குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததைப் பார்த்த அவர்கள் அதிர்ந்தே போய் விட்டார்கள். கதறித் துடித்தார்கள். அய்யோ! என் குழந்தை இறந்து விட்டதே!" என்று கண்ணீர் விட்டு அழுதார்கள்.
இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரிந்தால், பூஜைக்கு வந்த யாரும் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பதால், அந்தக் குழந்தையை அண்டாவில் இருந்து எடுத்து, ஒரு துணியில் சுற்றி ஓரமாக வைத்தனர். நடந்த விவரத்தை யாரிடமும் சொல்லவில்லை.
விருந்து முடிந்தபிறகு சொல்லலாம் என்று முடிவெடுத்து, வெள்ளப் பெருக்காய் பெருக்கெடுத்து வந்த துக்கத்தைத் தொண்டைக் குழிக்குள் போட்டு புதைத்துக் கொண்டார்கள்.
விபரீதம் நடந்ததை ஏற்கனவே ஸ்ரீராகவேந்திரர் அறிந்து விட்டாரே. அவர், கிராமத் தலைவரிடம், உங்கள் குழந்தையை அழைத்து வாருங்கள்... என்று பல முறை கூறினார்.
அதோ... இதோ என்று தட்டிக் கழித்த கிராமத் தலைவருக்கு கடைசியில் வேறு வழி தெரியவில்லை. நடந்த உண்மையை ஸ்ரீராகவேந்திரர் முன் போட்டு உடைத்து விட்டார்.
அந்த மகானின் பாதங்களில் விழுந்து அவரும், அவரது மனைவியும் கதறினார்கள்.
துணியில் ஓரமாகச் சுற்றி வைத்திருந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தனர். அந்தக் குழந்தையின் மீது தனது கமண்டலத்தில் இருந்த நீரைத் தெளித்தார் ஸ்ரீராகவேந்திரர். கண்களை மூடிக்கொண்டு சிறிதுநேரம் பிரார்த்தனை செய்தார்.
என்னவொரு ஆச்சரியம்! இறந்து போய் விட்டது என்று முடிவு செய்யப்பட்ட குழந்தையின் உடல் அசைந்தது. குழந்தையின் நின்று போன இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. மூடியிருந்த கண்கள் திறந்தன. உதடுகளும் நடுங்கின. சிறிதுநேரத்தில் பேச்சும் வந்தது.
சுற்றியிருந்த பக்தர்கள் எல்லோரும் ஆனந்தப் பரவசத்தில் மூழ்கினார்கள். குழந்தையின் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் போனது. ஸ்ரீராகவேந்திரரின் பாதங்களில் ஆனந்தத்தோடு விழுந்து வணங்கினார்கள்.