காந்திஜி ஏழைகளோடு பழகப்பழக ஆடம்பரமான வாழ்க்கையை வெறுத்தார். தன்னுடைய தேவைகளைக் குறைத்து எளிமையாக வாழத் தொடங்கினார்.
காந்திஜி ஒரு நாள் சலவைக்கூலி அதிகமாக ஆவதைக் கவனித்தார். மேலும் சலவைக்குப் போடப்பட்ட துணிகள் குறித்த காலத்தில் கிடைக்காமல் இருந்தன. எனவே, துணிகளைத் தாமே சலவை செய்வது என்ற முடிவுக்கு வந்தார்.
உடனே சலவை செய்யும் முறைகளை விளக்கும் புத்தகம் ஒன்றை வாங்கி வந்து படித்தார். சலவை செய்யும் முறைகளையும், இஸ்திரி போடுவது குறித்தும் கற்றுக் கொண்டார்.
முதன்முறையாக அவர் சலவை செய்த உடையைப் போட்டுக் கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றார். அங்கிருந்தவர்களெல்லாம் அவரைப் பார்த்து சிரித்தார்கள். அதன் காரணம் பின்னால்தான் தெரிந்தது.
முதன்முறையாதலால் காந்திஜி சலவை செய்த சட்டைக்கு அதிகமாகக் கஞ்சி போட்டு விட்டார். அதனால் அவருடைய சட்டைக் காலரிலிருந்து கஞ்சிப்பசை காய்ந்து உதிர்ந்து கொண்டிருந்தது. இதைக்கண்டுதான் மற்றவர்கள் சிரித்தார்கள். ஆனால், காந்திஜி பிறர் சிரிப்பதைப் பற்றி என்றுமே கவலைப்படுவதில்லை. தமது செயலில் மட்டும் கருத்தாக இருப்பார்.
சலவைத் தொழிலைத் தாமே செய்தது போல் முடிவெட்டும் தொழிலையும் அவரே செய்யத் தொடங்கினார்.
ஒருநாள் காந்திஜி முடிவெட்டும் கடை ஒன்றுக்குச் சென்றார். அங்கே முடி வெட்டியவர் ஓர் ஆங்கிலேயர். ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு முடி வெட்டமாட்டார்கள். ஆகவே, அவர் காந்திஜிக்கு முடிவெட்ட மறுத்து விட்டார். அத்துடன் ஏளனமாகவும் பேசினார். இதனால் காந்திஜியின் மனம் புண்பட்டது.
காந்திஜி உடனே கடையில் முடி வெட்டும் ஒரு கத்தரி வாங்கிக் கொண்டார். கண்ணாடியின் முன் நின்று தாமே முடிவெட்டிக் கொண்டார். முன்பக்கம் ஓரளவு சரியாகயிருந்தாலும் பின்பக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும் அப்படியே நீதிமன்றத்திற்குச் சென்றார்.
நீதிமன்றத்தில் எல்லோரும் காந்திஜியைப் பார்த்து சிரித்தார்கள். உங்கள் முடியை எலி கத்தரித்து விட்டதா? என்று கேலி செய்தார்கள். காந்திஜியோ, "வெள்ளைக்கார நாவிதன் என்னுடைய கருப்பு முடியை வெட்ட மறுத்து விட்டான். ஆகையால் நானே வெட்டிக்கொண்டேன்" என்று பதில் சொன்னார். அதற்குமேல் அவர்கள் பதில் ஏதும் பேசவில்லை. காந்திஜியும் தாமே முடிவெட்டிக் கொள்வதையும் நிறுத்தவில்லை.
தன்னுடைய வேலைகளைத் தானே செய்து கொள்ள வேண்டும். எந்த வேலையும் தாழ்வானதில்லை, எல்லாம் உயர்ந்தவைதான்." என்பது காந்திஜியின் கொள்கை. இதை அவர் தம்முடைய வாழ்க்கையில் பின்பற்றி அதன்பிறகே பிறருக்கு எடுத்துச் சொன்னார்.