ஒருநாள் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் வீட்டிற்கு குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா சென்றிருந்தார்.
அப்போது கொத்தமங்கலம் சுப்பு, “வள்ளியப்பா, நீதான் குழந்தைக் கவிஞர் என்று நினைத்துக் கொள்ளாதே! இங்கேயும் ஒரு குழந்தைக் கவிஞர் இருக்கிறார். வரவழைக்கட்டுமா? என்றார்.
குழந்தைக் கவிஞர் புன்னகையுடன் தலையசைத்தார்.
சுப்பு வீட்டிற்குள் சென்று ஐந்து வயதுப் பையனை அழைத்து வந்தார்.
“டேய், உன் பாட்டை இவரிடம் பாடிக் காட்டு” என்றார்.
உடனே அந்தச் சிறுவன்,
“பாட்டி பாட்டி பாட்டி
பாட்டி புடவை ரெண்டாக் கிழிஞ்சா
வேட்டி வேட்டி வேட்டி”
என்று பாடினான்.
சிறுவனின் பாட்டைக் கேட்டதும் குழந்தைக் கவிஞர் மகிழ்ச்சி பொங்க அவனை அருகில் அழைத்துத் தட்டிக் கொடுத்தார்.
அவன் அவரிடமிருந்து ஓட முயற்சித்தான்.
“நில் நில் நில்
நில்லா விட்டால் உடனே ஓடிச்
செல் செல் செல்
சொல் சொல் சொல்
சொல்லித் தந்த பாட்டிக்கெங்கே
பல் பல் பல்”
என்று குழந்தைக் கவிஞர் பாட அங்கே சிரிப்பு மழைதான்.