ஒருமுறை அறிஞர் பெர்னாட்ஷா ஒரு ஓவியரிடம் தனது படத்தை வரைந்து தரும்படி கேட்டார். அதற்குக் கூலியாக 100 பவுண்ட் தருவதாகவும் ஒப்புக் கொண்டார்.
அந்த ஓவியரும் ஷாவை சிறப்பாக வரைந்து கொண்டு வந்து கொடுத்தார்.
அந்த ஓவியத்தைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்த ஷா சிறிது நேரம் யோசித்துவிட்டு நூறு பவுண்ட் கூலியை இருபது பவுண்டுகள் வீதம் ஐந்து காசோலைகளில் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.
மறுநாள் திரும்பி வந்த ஓவியர், “அய்யா! தாங்கள் நூறு பவுண்டுக்கும் ஒரே காசோலையாகத் தரக் கூடாதா? இருபது பவுண்டுகளாக ஐந்து காசோலைகளாகக் கொடுத்து விட்டீர்களே?” என்றார்.
“அது பற்றி பிறகு சொல்கிறேன். காசோலைகளை வங்கியில் மாற்றி விட்டீர்களா?” என்று ஷா கேட்டார்.
”இன்னும் இல்லை” என்றார் அந்த ஓவியர்.
“இனியும் மாற்றி விட வேண்டும். இப்பொழுது என் கையெழுத்துக்கு விலை மிக அதிகம். ஒரு கையெழுத்துக்காக நானே முப்பது பவுண்ட் வாங்குகிறேன். என் கையெழுத்துக்காக ஏங்கும் சில ஆசாமிகளிடம் இந்த ஐந்து காசோலைகளையும் தனித்தனியே விற்றால் உங்களுக்கு நூற்றைம்பது பவுண்ட் கிடைக்கும். உங்களுக்கும் ஐம்பது பவுண்ட் லாபம் கிடைக்கும். எனக்கும் நூறு பவுண்ட் லாபம் கிடைக்கும்” என்றார் ஷா.
”எனக்கு லாபம் கிடைக்கும் சரி. உங்களுக்கு எப்படி லாபம் கிடைக்கும்?” என்றார் அந்த ஓவியர்.
”என் கையெழுத்துள்ள காசோலையை அவர்கள் வங்கிக்குச் சென்று மாற்றப் போவதில்லை. அவர்கள் என் கையெழுத்துக்காக வைத்துக் கொள்வார்கள். அப்படியானால் எனக்கும் நூறு பவுண்ட் லாபம்தானே?” என்றார் பெர்னாட்ஷா.