காயிதே மில்லத் ஒருநாள் பொதுக்கூட்டத்திற்குச் சென்றுவிட்டு இரவு 11 மணிக்கு மேல் வீடு திரும்பினார். எப்பொழுதும் 10 மணிக்குள் தூங்கிவிடும் அவரது தாய் அன்று கண் விழித்திருந்தார்.
தாயார் தூங்காமல் விழித்திருப்பதைப் பார்த்து, “என்னம்மா, உடல் நலமில்லையா? தூங்காமல் விழித்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
அவர் இரவுச் சாப்பாட்டினைக் கொண்டு வந்து அவர் முன் வைத்து, “மகனே! நீ முதலில் சாப்பிடு. பின்னர் சொல்கிறேன்” என்றார்.
காயிதேமில்லத் சாப்பிட்டு முடித்த பின்பு தாயிடம், “அம்மா, சாப்பிட்ட பின்பு சொல்கிறேன் என்று சொன்னீர்களே... உங்கள் உடலுக்கு என்ன?” என்று மீண்டும் விசாரித்தார்.
“மகனே, எனக்கு உடல் நலமாகத்தான் இருக்கிறது. காலில் சிறிது வலி இருக்கிறது. அதனால் தூக்கம் வராமல் விழித்திருந்தேன்” என்றார்.
தாயின் கால் வலியைப் பற்றிக் கேட்டதும் காயிதேமில்லத்தின் மனம் இலேசாக வலித்தது.
“அம்மா நீங்கள் படுத்துத் தூங்குங்கள். நான் உங்கள் கால்களை அழுத்தி விடுகிறேன். கால் வலி குறையும்” என்றார்.
அவர், “வேண்டாம் மில்லத், எனக்கு கால் வலி சிறிது நேரம் கழித்துப் போய்விடும். நீ கூட்டத்திற்குப் போய் வந்ததால் களைப்பாய் இருப்பாய். நீ முதலில் தூங்கு” என்றார்.
காயிதே மில்லத் படுக்கச் செல்லாமல் தாயின் காலைப் பிடித்து மெதுவாக அழுத்தியபடி இருந்தார்.
அந்தத் தாயின் கால் வலி மெதுவாகக் குறைய அவர் அயர்ந்து தூங்கினார்.
காலையில் வேகமாக எழுந்து பழக்கப்பட்ட அந்தத் தாய் அதிகாலையில் எழுந்தார். ஆனால், அப்ப்பொழுதும் காயிதேமில்லத் தூங்காமல் தாயின் காலை அழுத்தி விட்டுக் கொண்டிருந்தார்.
இதைக் கண்ட அந்தத் தாய் கண் விழித்துப் பார்த்துக் கண் கலங்கிப் போனார்.
“மில்லத், என் தூக்கத்திற்காக உன் தூக்கத்தை விட்டு என் காலை அழுத்திக் கொண்டிருக்கிறாயே!” என்றார் அந்தத் தாய்.
என் தூக்கம் இருக்கட்டும். தங்களின் கால் வலி இப்போது எப்படி இருக்கிறது? என்று கேட்டார் காயிதே மில்லத்.
”மகனே என் கால் வலி போய் விட்டது. நீ சிறிது நேரமாவது தூங்கு!” என்றார்.
காயிதேமில்லத் போன்று தாய்க்குச் செய்யும் சேவைதான் உண்மையான சேவை என்பதை சிறுவர்கள் பெரியவர்களான பின்பும் உணர வேண்டும்.