மாணவர்கள் ஆசிரியரைக் கிண்டல் செய்யும் பழக்கம் அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. அப்படி கிண்டல் செய்யும் போது ஆசிரியரின் பதிலால் அவமானப்பட்டு நின்ற ஒரு மாணவனைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
பரிதிமாற் கலைஞர் என தூய தமிழில் தன் பெயரை மாற்றிக் கொண்டவர் சூரிய நாராயண சாஸ்திரிகள். இவர் இலக்கண வகுப்பு ஒன்று நடத்திக் கொண்டிருந்த போது அவரைக் கிண்டல் செய்யும் நோக்கத்துடன் ஒரு குறும்புக்கார மாணவன், "அய்யா, நீங்கள் பாடம் நடத்தியதில் எழுத்து புரிகிறது. தளை புரிகிறது, தொடை புரிகிறது, ஆனால் தொடைக்கு மேலே ஒன்றும் புரியவில்லையே, அதைச் சற்று விளக்கமாகக் கூறுங்கள்" என்றான்.
எதுகை, மோனை, தளை, யாப்பு, சீர், தொடை என்பதெல்லாம் செய்யுள் இலக்கண வரம்பிற்குள் வருபவை. ஆனால் அந்த மாணவன் "தொடைக்கு மேல் விளக்குங்கள்" என்றான்.
அதற்கு பரிதிமாற் கலைஞர் "தனியே என் அறைக்கு வா! விளக்குமாற்றால் விளக்குதும்" என்றார்.
"விளக்குமாற்றால் விளக்குகிறேன்" என்பதில் இரு பொருள் உண்டு விளக்குமாறு எனப்படும் "துடைப்பத்தால்" என்று ஒரு பொருள், "விளக்கமாக" என்பது இன்னொரு பொருள்.
ஆசிரியரின் சமயோசிதமான இந்த பதிலால் வகுப்பறையிலிருந்த அனைத்து மாணவர்களும் சிரிக்க கேள்வி கேட்ட மாணவன் மட்டும் வெட்கித் தலை குனிந்தான்.